விடைத்தாள் திருத்தும் பணி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

விடைத்தாள் திருத்தும் பணி

*பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்: கவனமுடன் பணியாற்ற ஆசிரியர்களுக்கு அறிவுரை*

பெரம்பலூர்:

பெரம்பலூரில் பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி நேற்று துவங்கியது. மிகுந்த கவனமுடன் பணியாற்ற வேண்டுமென முதன்மை கல்வி அதிகாரி அறிவுரை வழங்கினார். தமிழக அளவில் பிளஸ்2 பொதுத்தேர்வு மார்ச் 2ம் தேதி துவங்கி 31ம் தேதி வரை நடந்தது. இந்த பொதுத்தேர்வை அரசு பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 68 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 4,701 மாணவர்கள், 4,569 மாணவிகள் என மொத்தம் 9,270 மாணவர்கள், 24 மையங்களில் எழுதினர். தனித்தேர்வர்களும் தேர்வெழுதினர்.அதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 8ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை நடந்தது. எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வை அரசு பள்ளிகள், ஆதிதிராவிட நலப்பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 136 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 5,256 மாணவர்கள், 4,506 மாணவிகள் என மொத்தம் 9,762 பேர், 32 மையங்களில் தேர்வெழுதினர். தனித்தேர்வர்களும் தேர்வெழுதினர்.
இதைதொடர்ந்து எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள், பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் உள்ள பனிமலர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 1ம்தேதி முதல் நடந்து வருகிறது. மாவட்ட கல்வி அலுவலர்(பொ) அம்பிகாபதி தலைமையில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் பிளஸ்2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள், ரோவர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று முதல் நடந்து வருகிறது. பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தலைமையில் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை நேற்று துவக்கி வைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி பேசும்போது, முதன்மை விடைத்தாள் திருத்துவோர், உதவி விடைத்தாள் திருத்துவோர் மிகுந்த கவனத்துடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த விடைத்தாள்களில் மாணவர்களில் உயர்கல்விக்கான திட்டமிடல், நம்பிக்கை, எதிர்காலம் இருப்பதால் கவன குறைவின்றி பணியாற்ற வேண்டும் என்றார். மாவட்ட கல்வி அலுவலர் (பொ) அம்பிகாபதி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பிரேம்குமார், மணிவண்ணன் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Please Comment