ஒரு மணி நேர விமானசேவை நகரங்களில் சேலம், நெய்வேலி, ஓசூர்!
தமிழகத்தில் சேலம், ஓசூர், நெய்வேலி நகரங்களில் இந்த ஆண்டுக்குள் ‛உடான்' திட்டத்தின் கீழ் விமான சேவை தொடங்கப்பட உள்ளது.
உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், பயணிகளின் போக்குவரத்து நாட்டின் 8 முக்கிய நகரங்களுக்கு இடையே மட்டுமே அதிகமாக உள்ளது. விமானப் போக்குவரத்தை பரவலாக்க வேண்டும்; நாட்டின் குட்டி நகரங்களும் விமானப் போக்குவரத்து வசதியைப் பெறும் வகையில் 'உடான்' திட்டம் கடந்த ஆண்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இதன் கீழ், Regional connectivity scheme (RCS) என்ற சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 128 புதிய பாதைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், இணைப்பு விமானங்கள் நிறைய விட முடியும். சென்னை- சேலம்- பெங்களூரு போன்ற நகரங்களை இணைக்க முடியும்.
உள்நாட்டு விமான சேவை நிறுவனங்கள் லாபகரமாக இயங்க வைக்க முடியும். இருக்கைகள் காலியாக இருக்காது. பயணிகளும் குறைந்தக் கட்டணத்தில் பறக்க முடியும். இந்தத் திட்டத்தின் கீழ், 50 சதவீத டிக்கெட்டுகள் 2,500 ரூபாய்க்கு விற்க வேண்டும்; மற்ற டிக்கெட்டுகளைச் சந்தை விலையில் விற்கலாம்.
தமிழகத்தில் சேலம், நெய்வேலி, ஓசூர் மற்றும் புதுச்சேரி உட்பட நாடு முழுவதும் 45 நகரங்களில் புதிய விமான நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. புதிய விமான நிலையங்கள் சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி, மும்பை, ஹைதராபாத், புனே, விசாகப்பட்டினம் போன்ற முக்கிய விமான நிலையங்களுடன் இணைக்கப்படும். அதனால், கூடுதலாக 128 வழித்தடங்கள் கிடைக்கின்றன. இந்தத் திட்டத்தில் இணைந்து சேவையாற்ற 5 விமான நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 'உடான்' திட்டத்தின் கீழ் 128 விமான வழித்தடங்களுக்கான ஏலம் விடப்பட்டது. இதில், ட்ரூ ஜெட், ஸ்பைஸ் ஜெட், அலையன்ஸ் ஏர், ஏர் டெக்கான், ஏர் ஒடிஷா நிறுவனங்கள் புதிய சேவை வழங்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளன.
இந்தத் திட்டம் குறித்து ட்ரூ ஜெட் நிர்வாக இயக்குநர் வெங்கஜலபதி உமேஷ் கூறுகையில், ''இவை அனைத்தும் ஒரு மணி நேர பயணத்தில் செல்லக் கூடிய மார்க்கங்கள். ஹைதராபாத்தில் புறப்படும் விமானம் நண்டெட் நகரில் தரையிறங்கும். அடுத்து உடனே மும்பை நோக்கி பயணிக்கும். மும்பை- நண்டெட்- ஹைதரபாத் மார்க்கம் என இது அழைக்கப்படும். 18 மார்கங்களில் எங்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. இரு மாதத்தில் சேவையைத் தொடங்கி விடுவோம்'' என தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்த ஒப்புக் கொண்டுள்ள மாநிலங்களில் விமான நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ‘உடான்’ திட்டத்தின்படி இந்த ஆண்டு இறுதிக்குள் 45 புதிய விமான நிலையங்களையும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நெய்வேலி, ஓசூர் மற்றும் புதுச்சேரியில் விமான நிலையங்கள் அமைக்கும் பணிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது. சேலத்தில் இருந்து பெங்களூரு, சென்னை, புதுச்சேரிக்கும்; நெய்வேலியில் இருந்து சென்னைக்கும்; ஓசூரில் இருந்து சென்னைக்கும்; புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத், சென்னை மற்றும் சேலத்துக்கும் விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளன. 18 முதல் 78 இருக்கைகள் வரை கொண்ட விமானங்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஏர் டெக்கான் 34 மார்க்கங்களில் சேவையாற்ற உள்ளது. ஸ்பைஸ் ஜெட் 11, ஏர் ஒடிஷா 50 அலையன்ஸ் ஏர் 15, ட்ரூ ஜெட் 18 பாதைகளில் சேவையாற்றப் போகின்றன. இப்போது சென்னையில் இருந்து சேலத்துக்கு செல்ல ரயிலில் 8 மணி நேரம் ஆகும். விமான சேவை தொடங்கப்பட்டால் 45 நிமிடத்தில் சேலம் சென்று விட முடியும்.
No comments:
Post a Comment
Please Comment