2 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு: அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு
''அரசு பள்ளிகளில், இரண்டு லட்சம் மாணவர்களை சேர்க்க, திட்டமிடப்பட்டுள்ளது'' என, அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில், மாவட்டத்தில், கடந்த, அரசு பொதுத்தேர்வுகளில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுத் தந்த, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் ஆசியா மரியம் தலைமை வகித்தார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:ஜூலையில், லண்டனில் இருந்து வரும், 100 பேராசிரியர்கள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத்தர உள்ளனர். மத்திய கல்வித்துறை செயலர், தமிழக பாடத்திட்டத்துக்கு பாராட்டு தெரிவித்து, இதை முன்மாதிரியாக கொண்டு, இந்தியா முழுக்க அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் உதவியுடன், செப்டம்பர் வரை, இரண்டு லட்சம் மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆறு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, ஸ்மார்ட் கிளாஸ், 3,000 பள்ளிகளில் கொண்டு வரப்படும். ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, வகுப்பறைக்கு, 10 கணினி; பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, 20 கணினி என வழங்கி, பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சிறந்த ஆசிரியர், 100 பள்ளிகளுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வரும், கல்வியாண்டில், பிளஸ் 2 பாடத்திட்டத்தில் தனித்திறன் பயிற்சி இணைக்கப்படும். 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப்லாய்ட் கணினி வழங்கப்பட உள்ளது. தலா, 100 பள்ளிகள்,, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.
விழாவில், 161 பள்ளிகளைச் சேர்ந்த, 1,322 ஆசிரியர்களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டன.. அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
Please Comment