8 ஆண்டுகளுக்கு பின் செங்கோட்டை - கொல்லம் பயணிகள் ரயில் சேவை தொடக்கம் : பயணிகள் மகிழ்ச்சி.
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு செங்கோட்டையில் இருந்து கொல்லத்துக்கு பயணிகள் ரயில் சேவை திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையிலிருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு மீட்டர்கேஜ் பாதையில் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்தப் பாதையை அகலப் பாதையாக மாற்றுவதற்காக, கடந்த 2010ஆம் ஆண்டு ரயில் சேவை நிறுத்தப்பட்டு அகலப் பாதை பணிகள் தொடங்கியது.
இந்தப் பணிகள் சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்தது. இந்த வழித்தடத்தில் சோதனை ஓட்டம் மற்றும் அதிகாரிகள் ஆய்வு நடைபெற்றது. தொடர்ந்து வாரம் இருமுறை தாம்பரம் - கொல்லம் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், செங்கோட்டை - கொல்லம் இடையிலான பயணிகள் ரயில் சேவை திங்கள்கிழமை தொடங்கியது. இதனால் இரு மாநிலங்களில் உள்ள மக்களும், வர்த்தகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த வழித்தடத்தில் ரயில் சேவை தொடங்கியதால் செங்கோட்டை வர்த்தகர்கள் மற்றும் ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் ரயிலை இயக்கிய ஓட்டுநர்களுக்கும் மற்றும் பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த ரயில் தினமும் காலை 11.20-க்கு செங்கோட்டையிலிருந்து புறப்பட்டு மதியம் 2.30-க்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கத்தில் தினமும் காலை 10-30-க்கு கொல்லத்திலிருந்து புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு செங்கோட்டை வந்தடையும். செங்கோட்டையிலிருந்து புனலூருக்கு ரூ.15-ம், கொல்லத்திற்கு ரூ.30-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
Please Comment