அண்ணா பல்கலை.யில் மூன்று நாள் புத்தகக் கண்காட்சி தொடக்கம்: அனுமதி இலவசம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அண்ணா பல்கலை.யில் மூன்று நாள் புத்தகக் கண்காட்சி தொடக்கம்: அனுமதி இலவசம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மூன்று நாள்கள் புத்தகக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.கே.சூரப்பா கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.
பொறியியல், தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சி மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு உதவும் வகையில், பல்கலைக்கழக நூலகத் துறை சார்பில் கடந்த 10 ஆண்டுகளாக இந்த புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு அனுமதி இலவசம். 




அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 20) வரை, காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இந்தக் கண்காட்சிநடைபெறும்.



இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறியது:
புத்தகக் கண்காட்சியில் 47 புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பொறியியல், அறிவியல் தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் அனைத்துத் துறைகள் சார்ந்த 1லட்சத்துக்கும் மேற்பட்ட, ரூ. 5 கோடி மதிப்பிலான புத்தகங்களை விற்பனைக்கு வைத்துள்ளனர். ஆசிரியர்களும், மாணவர்களும், பொதுமக்களும் புத்தகங்களை பார்வையிட்டு தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிப் பயன்பெற இந்தக் கண்காட்சி மூலமாக அரிய வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. 


அதுமட்டுமின்றி, அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்துத் துறைகளைச் சார்ந்த இயக்குநர்கள், பேராசிரியர்கள், இணைப்பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் இந்தப் புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட்டு, பல்கலைக்கழக நூலகத்துக்குத் தேவையான புத்தகங்களைப் பரிந்துரை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.


கண்காட்சி தொடக்க விழாவில், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) எஸ்.கணேசன், துணைப்பதிவாளர் செல்லதுரை, நூலக இயக்குநர் ஜி.கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

Please Comment