ஆங்கில வழிக்கல்வி சேர்க்கையை அதிகரிக்க பச்சை கம்பளம் விரித்து அரசு பள்ளி அசத்தல் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஆங்கில வழிக்கல்வி சேர்க்கையை அதிகரிக்க பச்சை கம்பளம் விரித்து அரசு பள்ளி அசத்தல்

ஆங்கில வழிக்கல்வி சேர்க்கையை அதிகரிக்க பச்சை கம்பளம் விரித்து அரசு பள்ளி அசத்தல்


கோபிசெட்டிபாளையம்: கோபி அருகே கள்ளிப்பட்டி அரசு துவக்கப்பள்ளியில், ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையில், பச்சை கம்பளம் விரித்து, ஆங்கில வழிக்கல்வியில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, புதிய முயற்சி மேற்கொண்டுள்ளனர்.கோடை விடுமுறை முடிந்து, கடந்த ஜூன், 1 முதல், தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டது. 


தனியார் பள்ளிக்கு நிகராக, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, அரசு பள்ளிகள் பல்வேறு யுக்தியை கையாண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம், கோபி அருகே கள்ளிப்பட்டி பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, ஆங்கில வழிக்கல்வி போதிக்கின்றனர். தலைமை ஆசிரியை கிறிஷ்டி பெல்லா தலைமையில் மொத்தம் மூன்று ஆசிரியர்கள் போதிக்கின்றனர்.



இப்பள்ளியில், காடையம்பாளையம், கணக்கம்பாளையம், பூஞ்சோலை, கள்ளிப்பட்டி, திருவள்ளுவர் நகரை சேர்ந்த, 80 குழந்தைகள் பயில்கின்றனர். மாணவர் சேர்க்கைக்காக, பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். வகுப்பறை கட்டடத்தை இரண்டாக பிரித்து, மழலைகளை கவரும் வகையில், ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை உருவாக்கியுள்ளனர். காமராஜர் பிறந்தநாளன்று, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டு, பள்ளி மேலாண்மை குழு மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் மூலம், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில், சீர்வரிசை பொருட்கள் பள்ளிக்கு வழங்கியுள்ளனர்.



அவற்றில், எல்.ஈ.டி.,- ஸ்மார்ட் 'டிவி', கம்ப்யூட்டர், குழந்தைகளை கவரும் சேர், புரொஜக்டர் என வழங்கியுள்ளனர். ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைக்குள், பச்சை கம்பளம் விரித்து, பெற்றோர் மற்றும் குழந்தைகளை கவர்ந்துள்ளனர்.இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் தரப்பில் கூறியதாவது: காமராஜர் பிறந்த நாளில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில், சீர் வரிசை பொருட்களை பெற்று, ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையை அழகுபடுத்தியுள்ளோம். பச்சை கம்பளம் விரித்ததால், ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புக்கு, குழந்தைகள் ஆர்வமாக வருகின்றனர். ஒன்றாம் வகுப்புக்கு, புதிய பாடத்திட்டமாக, கியூ ஆர் கோடு மூலம் போதிக்கிறோம்.
கடந்த கல்வியாண்டில், எங்கள் பள்ளியில் மொத்தம், 45 குழந்தைகள் பயின்றனர். வண்ணமயமான ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையை கண்டு, நடப்பாண்டில் சேர்க்கை எண்ணிக்கை, 80 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Please Comment