மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மகாத்மா காந்தியின் வாழ்க்கையில்

காந்திஜி தனது சபர்மதி ஆசிரமத்தில் தங்கியிருந்த காலத்தில் ஒரு வாலிபன் அங்கு தங்கி பணிவிடைகள் செய்வதற்காக வந்து சேர்ந்தான்.

அந்த வாலிபன் மிகவும் நல்லவன்; ஒழுக்கமானவன். ஆசிரமத்தில் இருந்த அத்தனை குழந்தைகளின் மீதும் அன்பு கொண்டிருந்தான்.

ஒரு நாள் அந்த வாலிபன் ஒரு ஆசிரமச் சிறுமியுடன் சபர்மதி நதிக்கரையில் விளையாடிக் கொண்டிருந்தான். அவனது கையில், ஒரு எலுமிச்சம்பழம் இருந்தது. அந்த எலுமிச்சம் பழத்தை அந்தச் சிறுமியிடம் துõக்கிப் போட்டு அவள் பிடிப்பதற்குள் அவன் அதைப் பிடித்து, அவள் கையில் எலுமிச்சம்பழம் சிக்காமல் விளையாடிக் கொண்டிருந்தான். அந்தச் சிறுமியும் சளைக்காமல் அந்த எலுமிச்சம் பழத்தைப் பிடிக்க முயன்று கொண்டிருந்தாள்.

ஒரு சந்தர்ப்பத்தில் அந்த இளைஞன் எலுமிச்சம் பழத்தை நதியில் வீசி எறிவது போல் பாவனை செய்து, எலுமிச்சம் பழத்தை தனது கால்சட்டைப் பையிற்குள் போட்டுக் கொண்டான்.

எலுமிச்சம் பழத்தை காணாத சிறுமி விழித்தாள்.

""எங்கே பழம்?'' என்று கேட்டாள்.

""நதிக்குள் எறிந்துவிடடேன்!'' என்றான் இளைஞன்.

""நான் போய் தேடி எடுத்து வரட்டுமா?'' என்று கேட்டாள் சிறுமி.

""அது வீண் வேலை. பழம் கிடைக்காது!'' என்றான் வாலிபன்.

சிறுமியும் அதை நம்பிவிட்டாள்.

""சரி! விளையாடியது போதும். பாபுஜி தேடுவார். ஆசிரமத்திற்கு செல்லுவோம்!'' என்று சொன்னாள் சிறுமி.

இளைஞனும், சிறுமியும் ஆசிரமத்தை நோக்கி சென்றனர். சட்டென்று அந்த வாலிபன் தனது கால்சட்டைப் பையிற்குள்ளிருந்து கைக்குட்டையை எடுத்தான். அப்போது அந்தப் பையிற்குள் ஒளித்து வைத்திருந்த எலுமிச்சம்பழம் கீழே விழுந்தது.

அதை அந்தச் சிறுமி பார்த்துவிட்டாள். அவளுக்கு கோபம் வந்தது.

""ஏய்! பழம் ஆற்றில் விழுந்துவிட்டது என்று பொய்தானே சொன்னாய். இரு... இரு... பாபுஜியிடம் சொல்லுகிறேன்!'' என்ற சிறுமி, ஆசிரமத்திற்கு சென்று காந்திஜியிடம் அந்த விஷயத்தை கூறிவிட்டாள்.

காந்திஜி பிரார்த்தனைக் கூட்டம் முடிந்ததும் அந்த வாலிபனை அழைத்து, ""நதிக்கரையில் என்ன நடந்தது?'' என்று விசாரித்தார்.

வாலிபன் நடந்ததைக் கூறினான்.

""பார் தம்பி! எலுமிச்சம் பழம் நதிக்குள் விழுந்துவிட்டது என்று பொய்தான் சொல்லியிருக்கிறாய். குழந்தைகளுடன் விளையாடும் போது விளையாட்டுக்கு கூடப் பொய் சொல்லக்கூடாது. இன்று விளையாட்டிற்கு சொல்லும் பொய்தான், நாளடைவில் நிஜப் பொய் சொல்லுவதற்கும் வழி வகுக்கும்!'' என்றார் காந்திஜி.

அந்த அறிவுரையை கேட்ட வாலிபன் மனம் வருந்தித் தலை கவிழ்ந்தான்.

No comments:

Post a Comment

Please Comment