முகிலை முட்டி... காற்றை கிழித்து வருகிறது 'ஹைபர்சானிக்' விமானம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

முகிலை முட்டி... காற்றை கிழித்து வருகிறது 'ஹைபர்சானிக்' விமானம்

விண்ணைக் கிழித்துக் கொண்டு, சீறிப்பாயும் 'ஹைபர்சானிக்' தொழில்நுட்பத்துடன் கூடிய பயணிகள் விமானத்தை தயாரிக்க, 'போயிங்' திட்டமிட்டு உள்ளது. உலகின் முன்னணி விமான நிறுவனம் போயிங். தலைமையகம் வாஷிங்டன். 2016 கணக்கின் படி, 750 பயணிகள் விமானங்கள், 180 ராணுவ விமானங்கள், 5 செயற்கைக்கோள்களை தயாரித்துள்ளது. இந்நிலையில் 'ஹைபர்சானிக்' பயணிகள் விமானத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. 'ஹைபர்சானிக்' என்பது ஒலியின் வேகத்தை விட, ஐந்து மடங்கு அதிகம்.'ஹைபர்சானிக்' விமானத்தில் அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து, பிரிட்டனின் லண்டனுக்கு, இரண்டு மணி நேரத்தில் சென்று விடலாம். சாதாரண விமானங்களில், ஏழு மணி நேரம் ஆகும். இதனால் ஐந்து மணி நேரம், மிச்சமாகும். இந்த விமானம் மணிக்கு 6,125 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் பெற்றது. இது, அட்லாண்டிக் பெருங்கடலை, 2 மணி நேரத்திலும், பசிபிக் பெருங்கடலை 3 மணி நேரத்திலும் கடந்து விடும்.

ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படும் இன்ஜின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஹைபர்சானிக் பயணிகள் விமானங்கள் உருவாக்கப்படுகின்றன.இதுகுறித்து போயிங் தலைமை விஞ்ஞானி கெவின் பாவ்காட் கூறும்போது, ''இன்றைய தொழில்நுட்ப உலகில், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டுமெனில் எவ்வளவு நேரம் ஆகும் என்று தான், பயணிகள் முதலில் கேட்கின்றனர். உலகம் முழுவதும் ஒரே நாளில் சுற்றிவர, 'சூப்பர்சானிக்' வேகம் கூட, இன்று குறைவாக தெரிகிறது. தொழிலதிபர்கள் மற்றும் ராணுவத்தினருக்கு நேரம் மிக முக்கியம். இதனை கருத்தில் கொண்டு, 'ஹைபர்சானிக்' பயணிகள் விமானத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.

ஹைபர்சானிக் வேகம் வானியல் வேகத்தை 'மாக்' எண் அடிப்படையில் குறிப்பிடுகின்றனர். 'மாக் 1' என்பது ஒலியின் சராசரி வேகத்தை குறிக்கிறது. அதாவது ஒலியின் வேகம் என்பது, மணிக்கு 1,235 கி.மீ. இதனை 'டிரான்ஸ்சானிக்' என குறிப்பிடுவர்.

அதேபோல 'மாக்' எண் 1 - 5 வரை உள்ள வேகத்தை, 'சூப்பர்சானிக்' என குறிப்பிடுகின்றனர். இது மணிக்கு 1,470 - 6,126 கி.மீ., வேகம் வரை செல்லும். 'மாக்' 5 - 10 வரை உள்ள வேகத்தை 'ஹைபர்சானிக்' எனப்படுகிறது. இது மணிக்கு 6,125 - 12,251 கி.மீ., வேகத்தில் செல்லும்.

இதற்கு மேல் 'ஹை ஹைபர்சானிக்', 'ரீ என்ட்ரி' போன்றவை உள்ளன. 'மாக்' 1ஐ விட குறைவான வேகத்தை 'சப்சானிக்' என அழைக்கின்றனர். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 980 கி.மீ. இந்த வேகத்தில் தான் தற்போதைய பயணிகள் விமானங்கள் பயணிக்கின்றன.

No comments:

Post a Comment

Please Comment