பணி நேரத்தின்போது அடையாள அட்டையை அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அனைத்து அரசுத் துறை செயலாளர்கள், அரசுத் துறை தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு பணியாளர் மற்றும் சீர்திருத்தத்துறை செயலாளர் எஸ்.ஸ்வர்னா அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அரசு ஊழியர்கள் அனைவரும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பணியின்போது கண்டிப்பாக அணிவதை அந்தந்த துறையின் தலைவர் உறுதி செய்யவேண்டும் என்பதற்கான அறிவுரையை அவ்வப்போது அரசு வழங்கி வருகிறது.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 16.7.2018 அன்று உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், தமிழக அரசின் அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் குறிப்பாக, பொதுமக்களிடம் நேரடியாக பணியாற்றும் ஊழியர்களுக்கு 60 நாட்களுக்குள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், அடையாள அட்டை அணிவது தொடர்பாக ஏற்கனவே அரசு விதி இருந்தால் அந்த விதியை மிகவும் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்றும், விதியை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனவே, அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ள ஆணையை பின்பற்றி அடையாள அட்டையை கண்டிப்பாக அனைத்து ஊழியரும் அணிய வேண்டும் என்று அவர்களுக்கு துறைத் தலைவர்கள் அல்லது மாவட்ட ஆட்சியர்கள் அறிவுரை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Please Comment