குழந்தைகளின் மொழியறிவினை மேம்படுத்த இன்றைய பெற்றோர்கள் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
உலகம் தொழில்நுட்ப வளர்ச்சியால் வேகமாக சுருங்கி வருகிறது. எதிர் காலத்தில் உங்கள் குழந்தைகள் உயர்ந்த நிலையை அடைய வேண்டுமானால் அவர் களுக்கு நிச்சயம் பன்மொழித் திறன் அவசியமாகும். குறைந்தபட்சம் தாய்மொழி மற்றும் உலக தொடர்பு மொழியாவது அறிந்திருக்க வேண்டும்.
குழந்தைகளின் மொழியறிவினை மேம்படுத்த இன்றைய பெற்றோர்கள் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இருந்தாலும் நாம் அறியாத மொழியை பள்ளி வழியே பிள்ளைகள் கற்றுக்கொண்டுவிடுவார்கள் என நினைப்பது தவறாகும். உதாரணமாக "நமக்குத்தான் தமிழைத்தவிர மற்ற மொழிகள் தெரியாது. பிள்ளைகளாவது ஆங்கிலமும், இந்தியும் அறிந்து கொள்ளட்டும்" என்ற எண்ணத்தில் இந்த மொழிப்பாடங்களை தேர்வு செய்து படிக்க வைக்கும் பெற்றோர்கள் அதிகம்.
ஆனால், ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது மொழியறிவைப் பொறுத்தவரை உண்மையாகத்தான் இருக்கிறது. ஏனெனில் பட்டப்படிப்புவரை ஆங்கிலத்தில் படித்தவர்கள்கூட அந்த மொழியில் பேசுவதற்கு தடுமாற்றம் காண்கிறார்கள். எனவே மொழியறிவு என்பது படிப்பதால் மட்டும் வந்துவிடாது. மொழிகளை அறிய சிறப்பாக உச்சரிக்க கற்றுத் தர வேண்டும். பேசுவதற்கான சூழலையும் ஏற்படுத்தித்தர வேண்டும். அல்லது நாமும் அதே மொழியில் கலந்துரையாடி குழந்தைகளின் மொழியறிவை வளர்க்கலாம்.
ஸ்பெல்லிங் எனப்படும் உச்சரிப்புமுறைதான் எண்ணங்களையும், சிந்தனைகளையும் செம்மையான முறையில் பகிர்ந்து கொள்ள துணை புரியும். இது தொடர்பான பயிற்சி, மிக இளம் வயதில் வீட்டிலிருந்தே தொடங்கப்பட வேண்டும். பள்ளிகளில், மாணவர்களின் உச்சரிப்புத் திறனை சிறப்பாக்கும் வகையில், பயிற்சிகள் வழங்கப்பட்டாலும், அந்த திறனை மேலும் சிறப்பாக்க பல்வேறு வழிகள் உள்ளன. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி அதற்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. விளையாட்டு வழியாகவும், புதிர்கள் வழியாகவும், சொல் விளையாட்டு வழியாகவும் மொழியறிவை வளர்க்கும் அப்ளிகேசன்கள் இன்று மிகுந்துள்ளன. அவை பற்றி பார்க்கலாம்.
வித்தியாசமான அணுகுமுறை
ஆரம்ப நிலையில் எழுத்துகள், சொற்களைப் படிக்கும் சிறு குழந்தைகளுக்கான விளையாட்டுப் பயிற்சி இது. எழுது, படி என்று குழந்தைகளை இம்சிப்பதைவிட, விளையாட்டாய் ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ளச் செய்தால், வித்தியாசமான முறையில் சொல்லிக் கொடுத்தால் அவர்கள் எளிதாகவும், விருப்பத்துடனும் கற்றுக்கொள்வார்கள். அந்த வகையில், இது ஒரு மிக எளிமையான, எப்போதும் விளையாடக்கூடிய விளையாட்டு.
குழந்தைகளுக்கு, உங்களின் முதுகில், அவர்களுக்கு பிடித்த எழுத்துகள், வார்த்தைகளை எழுதச் சொல்லி, அது என்னவென்று நீங்கள் உணர்ந்து சொல்லலாம். இதன்மூலம் அவர்கள் உற்சாகம் பெறுவார்கள். மேலும், அவர்களது முதுகில், நீங்கள், சில வார்த்தைகளை எழுதி, அதை கண்டுபிடிக்கச் செய்து, அவர்களின் உச்சரிப்பு திறனை வளர்க்கலாம்.
புதிர் மற்றும் விளையாட்டு பயிற்சி
ஸ்கிராபிள் எனப்படும் வார்த்தை விளையாட்டுகள், குறுக்கு எழுத்துப் போட்டிகள் குழந்தைகளுக்கு மட்டுமானதல்ல. வயதிற்கு ஏற்ற வகையில் விதவிதமான வார்த்தை விளையாட்டுப் போட்டிகள் உள்ளன. அனைவரின் ஆதரவாலும் பத்திரிகைகளில் இத்தகைய போட்டிகள் தவறாமல் இடம் பெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. குடும்ப அளவில், மிகவும் விரும்பப்படுகிற ஒரு விளையாட்டாக, இந்த விளையாட்டு கருதப்படுகிறது. பல்வேறு காரணங்களுக்காக, இந்த விளையாட்டு ரசிக்கப்படுகிறது. இந்த விளையாட்டில், குழந்தைகளுடன் நீங்களும் இணைந்து கொண்டால், அவர்களின் உச்சரிப்பு முறை முன்னேறுவதை விரைவில் அறியலாம்.
வார்த்தை இணைப்பு மற்றும் ஸ்பெல்லிங் ஆகியவை கலந்த WORD JEOPARDY விளையாட்டு பயிற்சிகள் இணையத்தில் நிறைய கிடைக்கின்றன. எந்த வயது சிறுவர்களும், ஏன் பெரியவர்களும்கூட இதில் விளையாடி மொழியறிவு பெறலாம். இந்த விளையாட்டை குழுவாக விளையாடலாம். இந்த விளையாட்டில், ஒரு நபர், ஒரு வார்த்தையை சொல்ல, அந்த வார்த்தையோடு தொடர்புடைய இன்னொரு வார்த்தையை, எதிர் தரப்பு நபர் சொல்வார்.
உதாரணமாக, Bird என்ற வார்த்தை சொல்லப்பட்டால், அதற்கு தொடர்புடைய Peacock போன்ற மற்றொரு வார்த்தை எதிர்தரப்பால் சொல்லப்படும். இது குழந்தைகள் புதிய சொற்களை கற்றுக் கொள்ளவும், அதை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதையும் அறிய துணை செய்யும். பெற்றோர் அல்லது ஆசிரியர் இரு குழுவாக மாணவர்களை பிரித்து இந்த இப்படி புதிய சொற்களை அறிமுகம் செய்யலாம்.
பாடலாய் பாடலாம்.
குழந்தைகள் விளையாட்டிற்கு அடுத்த படியாக பாடல்களின் வழியே நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வார்கள். அதனால்தான் சிறுவர்களுக்கு அதிக அளவில் 'ரைம்ஸ்'கள் கற்றுத் தரப்படுகின்றன. இது மொழியறிவையும் வளர்க்க சிறந்த வழியாகும். நீங்கள் கற்றுத் தர விரும்பும் விஷயங்களை, உங்களால் முடிந்த அளவு ஒரு ராகத்துடன் பாடல்போல இசைத்து சொல்லிக் கொடுங்கள். குழந்தைகளும் அதே பாணியில் விரைந்து பாடி பழகிக் கொள்வார்கள்.
இதர வழிகள்
குழந்தைகளின் எளிய கற்றலுக்கு உதவும் வகையில், பல்வேறு வயதுப் பருவத்தினருக்கு ஏற்ற புத்தகங்கள், பலவிதமான எளிய உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் (apps) இன்று கிடைக்கின்றன. அதை, உங்களது குழந்தையின் ஆர்வத்திற்கேற்ப வாங்கிப் பயன்படுத்தலாம். உதாரணமாக காந்த எழுத்துகள், பஸில் எழுத்துக்களைக் கொண்டு கற்பிக்கலாம். படக்கதைகள், வார்த்தை விளையாட்டு புத்தகங்கள் வழியாகவும் கற்பிக்கலாம். அதற்காக நிறைய வசதி இருக்க வேண்டும் என்பதில்லை.
பெற்றோர், தங்களின் சூழலுக்கு ஏற்ப, பெரிய வசதிகள் ஏதுமின்றியே, தங்களின் குழந்தைகளுக்கு சிறப்பான பயிற்சி கொடுக்கலாம். குழந்தைகள், அபார கற்பனைத்திறன் மிக்கவர்கள். எனவே, அவர்களிடம் ஒரு சிறிய கதையை எழுதிக் காட்டுமாறு கூறலாம். அது மிக சாதாரணமாக இருந்தாலும் பாராட்டி உற்சாகப்படுத்துங்கள். உலகின் மிகச்சிறந்த படைப்பாளர்கள் எல்லாம் பின்தங்கிய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்தான். அவர்கள் வளர்ச்சியில் அவர்களது பெற்றோர் காட்டிய அக்கறையே அவர்களின் முன்னேற்றத்துக்கு காரணமாக இருந்திருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொண்டால் போதும்.மொத்தத்தில் பெற்றோர்களின் இடைவிடாத அர்ப்பணிப்பே, ஒரு குழந்தையின் மொழியறிவு மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது.
கவனம் தேவை
அதே நேரத்தில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் பெற்றோர் கவனிக்க வேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள பயிற்சிகள் குழந்தைகளின் ஸ்பெல்லிங் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கான சிறப்பான வழிகள்தான். ஆனால் வார்த்தைகள், உங்களது குழந்தையின் அறிவு நிலைக்கேற்ப இருக்கிறதா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். குழந்தைகளால் புரிந்துகொள்ள இயலாத, கடின வார்த்தைகளாக இருந்தால் குழந்தைகள் சீக்கிரமே அந்த விளையாட்டின் மீது இழந்துவிடுவார்கள் என்பதை கவனத்தில் வையுங்கள்!
No comments:
Post a Comment
Please Comment