புதுச்சேரி அரசு பள்ளிகளில், ஒவ்வொரு வகுப்பிலும் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் சரிவர எழுத, படிக்கத் தெரியாத மாணவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம், பெற்றோர் மத்தியில் சபாஷ் பெற்றுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தடுப்பதற்காக, எட்டாம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெறச் செய்யும், &'ஆல் பாஸ்&' திட்டம் அமலில் உள்ளது. ஆனால், இது சில நேரங்களில் எதிர்மறையாக அமைந்து விடுகிறது. இவ்வாறு பாஸ் செய்து அடுத்தடுத்த வகுப்புகளில் காலடி எடுத்து வைக்கும் மாணவர்கள், குறைந்தபட்ச கற்றல் திறன்கூட இல்லாமல் உள்ளனர். குறிப்பாக, பத்தாம் வகுப்பு வந்தும்கூட மாணவ, மாணவியரில் சிலருக்கு, தாய்மொழியான தமிழில் எழுத, படிக்கத் தெரியாத நிலை உள்ளது. தமிழில் பிழையின்றி எழுதவும், தடையின்றி வாசிக்கவும் சிரமப்படுகின்றனர்.
தமிழ் மொழியை சரளமாக வாசிக்கத் தெரியாமல் திணறும் இந்த மாணவர்கள், கணிதம் உள்ளிட்ட மற்ற பாடங்களைப் படிப்பதும் கடினமாகும். இது, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு ரிசல்ட்டுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தற்போதைய நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 25 சதவீத மாணவர்களுக்கு, தமிழ் படிக்கத் தெரியவில்லை.
சொல்வது எழுதுதல் தேர்வு வைத்தால், பிழையாகத்தான் எழுதுகிறார்கள். இந்த அவல நிலையைப் போக்க, மாணவர்களின் குறைந்தபட்ச கற்றல் திறனை உறுதி செய்யும் திட்டத்தை, பள்ளிக் கல்வித் துறை துவக்கியுள்ளது. அரசு பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் எழுத, படிக்கத் தெரியாத மாணவர்களை கணக்கெடுத்து, தனியாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வகுப்பு மாணவர்களையும் வாசிக்க செய்து, சரியாக வாசிக்கத் தெரியாத மாணவர்களையும், பிழையோடு எழுதும் மாணவர்களையும் கண்டறிந்து வருகின்றனர். இத்தகைய மாணவர்களிடம் தனி கவனம் செலுத்தி, அவர்கள் மொழியை புரிந்து கொள்வதில் உள்ள பிரச்னைகளை கண்டறிந்து, சரி செய்து வருகின்றனர்.
இவ்வாறு, தொடர்ந்து தனி கவனம் செலுத்தி, சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் மாணவர்கள், இரண்டு மாதங்களில் தமிழில் தவறின்றி வாசிக்கவும், பிழையின்றி எழுதவும் திறன் பெறுகின்றனர். இதே போல், ஆங்கில மொழி கற்பதில் சிரமப்படும் மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு, பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
உளவியல் அணுகுமுறை தேவை :
ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சொல்லிக்கொடுத்து, ஒரு வகுப்பில் உள்ள பெரும்பாலான மாணவர்களுக்கு சரிவர வாசிக்கத் தெரியவில்லை என்றால், அது ஆசிரியர் மீதான பிரச்னை. ஒரு சில குழந்தைகளுக்கு மட்டும் வாசிக்கத் தெரியவில்லை என்றால், அது பிள்ளைகளின் பிரச்னை. பத்தாம் வகுப்பு பயின்ற மாணவனுக்கு தமிழ் எழுத்துக்களை நினைவு வைத்துக்கொள்ள இயலவில்லையெனில், அந்த மாணவருக்கு உளவியல் ரீதியான பிரச்னை உள்ளது என்று அர்த்தம். இத்தகைய மாணவர்களுக்கு உளவியல் ரீதியான பயிற்சி தேவை.
கரிக்கலாம்பாக்கம் அரசு மேனிலைப் பள்ளியில் 40 மாணவர்கள் தாய்மொழியான தமிழை எழுத, படிக்கத் தெரியாமல் இருந்தனர். பள்ளிக் கல்வித் துறை துவங்கி உள்ள சிறப்பு பயிற்சிக்கு பிறகு, இம்மாணவர்கள் எழுத்து கூட்டி, படிக்க ஆரம்பித்துவிட்டனர். அடுத்தகட்டமாக, தவறு இல்லாமல் எழுத பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment
Please Comment