கேரளாவில் வீட்டு மாடியில் ஹெலிகாப்டரை இறக்கி உயிரை பணயம் வைத்து 26 பேரை காப்பாற்றிய பைலட்: 3 விநாடி தாமதித்திருந்தாலும் வெடித்து சிதறியிருக்கும்.
_வெள்ளத்தில் சிக்கிய 26 பேரை மீட்க வீட்டு மாடியில் ஹெலிகாப்டரை இறக்கிய பைலட் முயற்சி அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.கேரளாவில் வெள்ளத்தில் சிக்கித்தவித்த பொதுமக்களை மீட்கும் பணியில் முப்படைகளும் களமிறங்கி பணியாற்றி வருகின்றன. இதனால் ஆயிரக்கணக்கானோர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதில் விமானப்படைக்கு சொந்தமான 42பி ஹெலிகாப்டர் ஆபத்தான நிலையில் சிக்கித்தவித்த 26 பேரை மீட்க ஒரு வீட்டு மாடியில் இறங்கி, அனைவரையும் பத்திரமாக மீட்டது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதுபற்றிய விவரம் வருமாறு:
விமானப்படைக்கு சொந்தமான 42பி ஹெலிகாப்டரை பைலட் ராஜ்குமார் இயக்கினார். இதில் ராஜ்னீஷ் துணை பைலட்டாகவும், சத்தியார்த் வழிகாட்டும் நபராகவும், அஜித் என்பவர் விஞ்ச் ஆபரேட்டராகவும், தண்ணீரில் இறங்கி மீட்பவராக ராஜன் என்பவரும் சென்றனர். சாலக்குடி நகரில் மீட்பு பணியில் இவர்கள் ஈடுபட்டனர். காலையில் சாலக்குடி நகரில் இரண்டு படகுகள் மற்றும் 8 நீச்சல்காரர்களை இறக்கி விட்டனர். அதை தொடர்ந்து உணவு மற்றும் மீட்பு உபகரணங்களை இறக்கி விட்டு, பொதுமக்களை மீட்கும் பணியை தொடங்கினர்._
_அந்த நேரத்தில் இரண்டு அடுக்கு மாடியில் இருந்து சிலர் கையசைத்து ஹெலிகாப்டரை அழைத்தனர். அங்கு சென்றபோது பெரும்பாலும் வயதானவர்கள் அந்த கூட்டத்தில் இருந்தனர். மேலும் வீல்சேரில் அமர்ந்த நிலையில் ஒரு பெண்ணும் இருந்தார். அவர்களால் ஹெலிகாப்டரில் ஏற இயலவில்லை. இதையடுத்து அதிரடியாக பைலட் ராஜ்குமார் வீட்டு மாடியில் ஹெலிகாப்டரை தரையிறக்கி 26 பேரையும் ஏற்றினார். ஒரு சில விநாடிகள் அங்கு ஹெலிகாப்டர் நின்று இருந்தால் வெடித்து சிதறி இருக்கும். ஆனால் உடனடியாக ஹெலிகாப்டரை வீட்டு மாடியில் இருந்து இயக்கியதால் அத்தனை பேரும் காப்பற்றப்பட்டனர். இந்த காட்சி இணையதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த அனைவரும் பைலட் ராஜ்குமாரை பாராட்டி வருகிறார்கள்._
_பைலட் பரபரப்பு பேட்டி:
இரண்டடுக்கு மாடி வீடு மேல் ஹெலிகாப்டரை களமிறக்கியது குறித்து பைலட் ராஜ்குமார் கூறியதாவது: உதவி கேட்ட அத்தனை பேரும் வயதானவர்கள். அதில் ஒருவர் வீல்சேரில் வேறு அமர்ந்திருந்தார். எனக்கு வேறு வழி தெரியவில்லை. துணிச்சலுடன் வீட்டு மாடியில் ஹெலிகாப்டரை இறக்கி விட்டேன். 8 நிமிடம் அங்கு நிறுத்தி 26 பேரையும் மீட்டோம். இன்னும் 3 விநாடிகள் மட்டும் அங்கு நின்றிருந்தால் ஹெலிகாப்டர் வெடித்து சிதறியிருக்கலாம். ஆனால் நான் ஹெலிகாப்டரின் முழு எடையையும் வீட்டின் மேல் நிறுத்தவில்லை. பாதி பறந்த நிலையில்தான் ஹெலிகாப்டர் இருந்தது. இருந்தாலும் இது ஆபத்தான முயற்சி. கூடுதலாக மூன்று அல்லது 4 விநாடிகள் இதுபோன்று ஹெலிகாப்டர் நின்று இருந்தால் வெடித்து சிதறியிருக்கும்.
ஆபத்தான முயற்சியாக இருந்தாலும் அத்தனை பேரையும் காப்பாற்ற நான் எடுத்த சரியான முடிவு என்று தான் நினைக்கிறேன். இதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment
Please Comment