தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும் பொதுமக்களுக்கு இரண்டு மாதங்களுக்கு கால அவகாசம் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர்.
சென்னையில் மொத்த வாக்காளர்கள் 37,92,126. இதில் ஆண்கள் - 18,71,638, பெண்கள் - 19,19,582. இரண்டாவம் பாலினம் - 906
தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் வாக்காளர் பட்டியலின் நகல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு அளிக்கப்பட்டது.
சிறப்பு முகாம்கள்: தமிழகத்தில் ஆகஸ்ட் மாத நிலவரப்படி மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.82 கோடியாகும். அதில், ஆண் வாக்காளர்கள் 2.88 கோடி. பெண் வாக்காளர்கள் 2.94 கோடி. மூன்றாம் பாலித்தனவர் 5,184.
இரண்டு மாதம் கால அவகாசம்: வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள செப்டம்பர், அக்டோபர் ஆகிய இரண்டு மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் காலகட்டத்தில் செப்டம்பர் 9, 23, அக்டோபர் 7 மற்றும் 14 ஆகிய நாள்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்கள் வாக்குச் சாவடி மையங்கள் அமைந்துள்ள இடங்களிலேயே நடைபெறும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கான படிவங்களை அங்கேயே பூர்த்தி செய்து அளிக்கலாம். பூர்த்தி செய்த படிவங்களையும் அங்கேயே அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சிறப்பு முகாம்கள் நடைபெறாத நாள்களில், அலுவலக வேலை நேரத்தில் வாக்குச் சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் படிவத்தை அளித்திடலாம்.
சான்றுகளாக அளிக்க வேண்டியவை: பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி, வயது ஆகியவற்றுக்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
ரேஷன் அட்டை, வங்கி அல்லது அஞ்சலக சேமிப்புக் கணக்குப் புத்தகம், ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு, தொலைபேசி, சமையல் எரிவாயு இணைப்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் அண்மைக்கால ரசீது, ஆதார் கடிதம் ஆகியவற்றை முகவரிச் சான்றாக அளிக்கலாம்.
வயது சான்றாக பிறப்புச் சான்றிதழின் நகல் அல்லது பள்ளிச் சான்றிதழின் நகலை வழங்கலாம். 25 வயதுக்கு கீழுள்ள வாக்காளர்கள் வயதுச் சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயமாகும்.
இணையதளத்திலும் வசதி: வரைவு வாக்காளர் பட்டியல் தேர்தல் துறையின் இணையதளத்திலும் (elections.tn.gov.in) சனிக்கிழமை வெளியிடப்படும்.
வாக்காளர் பெயர் சேர்ப்புப் பணிகளை இணையதளத்திலும் மேற்கொள்ளலாம்.
மேலும், www.nvsp.in என்ற இணையதள முகவரியிலும் ஆன்-லைன் வழியாக விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Please Comment