மாணவர்களை அழைத்துவர சொந்த பணத்தில் ஆட்டோ வாங்கிய அரசு பள்ளி தலைமை ஆசிரியர் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மாணவர்களை அழைத்துவர சொந்த பணத்தில் ஆட்டோ வாங்கிய அரசு பள்ளி தலைமை ஆசிரியர்


மாணவர்களை அழைத்துவர சொந்த பணத்தில் ஆட்டோ வாங்கிய அரசு பள்ளி தலைமை ஆசிரியர்




தனியார் பள்ளிகளைப் போல் அரசுப் பள்ளியிலும் வசதிகள் தர வேண்டும், என்பதற்காக தனது சொந்த பணத்தில் ஆட்டோ வாங்கி, அதற்கு டிரைவரையும் நியமித்து மாணவர்களை தலைமை ஆசிரியர் ஒருவர் அழைத்து வருகிறார்.
இதனால், தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்த்த பெற்றோர், தற்போது அரசுப் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்த்து வருகின்றனர். இந்த சம்பவம் தெலங்கானா மாநிலம், கரீம்நகர் அருகே கர்ஸாகுர்த்தி கிராமத்தில் நடந்துள்ளது.




கர்ஸாகுர்த்தி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு கடந்த 2013-ம் ஆண்டு தலைமை ஆசிரியராக கண்கணலா கிஷான்ரெட்டி நியமிக்கப்பட்டார் (வயது56). இவர் பள்ளிக்குச் சென்று பொறுப்பேற்றபோது பள்ளியில் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 39 மட்டுமே இருந்தது கண்டு அதிர்ந்துவிட்டார்.
அதுகுறித்து அங்குள்ளவர்களிடம் காரணம் கேட்டபோது, அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி கற்பிக்கப்படுவதால், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அங்கு சேர்த்துவிட்டார்கள் எனத் தெரிவித்தனர். அரசுப் பள்ளிகளின் நிலைமையை நினைத்து வேதனைப் பட்ட கிஷான் ரெட்டி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சில நடவடிக்கைகளை தனது சொந்த முயற்சியில் எடுத்தார்.



முதலாவதாக மாவட்ட கல்வி மையத்தை அணுகி, தான் வேலைபார்க்கும் அரசுப்பள்ளியை ஆங்கில வழிக்கல்வியாக மாற்ற அனுமதி கேட்டார். முதலில் மறுத்த அதிகாரிகள், பின்னர் சூழலை அறிந்து அனுமதியளித்தனர். இதனால், 2015-16-ம் ஆண்டு கிஷான் ரெட்டி தனது பள்ளியை ஆங்கில வழிக்கல்வி கற்பிக்கும் பள்ளிக்கூடமாக மாற்றினார்.



அதன்பின் அப்பகுதியில் உள்ள பெற்றோர்களை வீடு வீடாகச் சந்தித்து பள்ளியின் நிலவரத்தையும், கல்வித் தரத்தையும் எடுத்துக்கூறி தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க வலியுறுத்தினார்.
மேலும் தனது சொந்த பணத்தில் ரூ.50 ஆயிரம் மதிப்பில் ஆங்கிலத்தில் பாடப்புத்தகங்களை வாங்கி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கினார். 2016-17-ம் ஆண்டு ரூ.25 ஆயிரம் செலவில் புத்தகங்களை வாங்கி மாணவர்களுக்கு கிஷான் ரெட்டி வழங்கினார்.


அதுமட்டுமல்லாமல், தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படுவதைப் போல் டை, பெல்ட், ஐடிகார்டு ஆகியவற்றை தனது சொந்த செலவில் தயாரித்து மாணவர்களுக்கு வழங்கினார்.இதனால், தனியார் பள்ளிகளில் இருக்கும் அனைத்து வசதிகளையும் அரசுப்பள்ளிக்கு செய்து கொடுத்து எந்தவிதத்திலும் குறைவில்லை என்பதை கிஷான் ரெட்டி வெளிக்காட்டினார்.



 இதனால், 39 மாணவர்கள் இருந்த பள்ளி அடுத்த 2 ஆண்டுகளில் 177 ஆக அதிகரித்தது.
அடுத்த பிரச்சினை தலைமை ஆசிரியர் கிஷான் ரெட்டிக்கு காத்திருந்தது. மாணவர்கள் வெகுதொலைவில் இருந்து பள்ளிக்கு வருவதில் சிரமத்தை உணர்ந்தனர். போக்குவரத்து வசதியும் உரிய நேரத்துக்கு இல்லை என்பதால், பெற்றோர்கள் வேதனை அடைந்தனர்.
இதையடுத்து, கிஷான் ரெட்டி தனது சொந்த பணத்தில் ஒரு ஆட்டோவை விலைக்கு வாங்கினார். அந்த ஆட்டோவில் மாணவர்களை காலையில் அழைத்து வருவது, மாலையில் வீடுகளில் பாதுகாப்பாக கொண்டுசேர்க்க பயன்படுத்தினார்.




 ஆட்டோ வாங்குவதற்காக ரூ.80 ஆயிரத்தையும், ஆட்டோ ஓட்டுவதற்காக ஓட்டுநருக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஊதியத்தையும் தனது சொந்த செலவில் கிஷான் ரெட்டி வழங்கினார்.
கொண்டபூர் கிராமத்தில் புறப்படும் ஆட்டோ அங்கிருந்து சிறுசிறு கிராமங்களில் இருந்து வரும் மாணவர்களை அழைத்துக் கொண்டு 7 கி.மீ தொலைவில் உள்ள பள்ளியை அடையும். அதன்பின் அச்சம்பள்ளி, கசாராம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆட்டோ மூலம் பள்ளிக்கு அழைத்து வரப்படுகின்றனர்.




தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆட்டோ கட்டணமாக ரூ.500 வசூலிக்கும் நிலையில், அரசு பள்ளி ஆட்டோவுக்கு எரிபொருள் செலவாக மட்டும் ரூ.200 வசூலிக்கப்படுகிறது. இதையும் பெற்றோர் மகிழ்ச்சியுடன் வழங்குகின்றனர்.



இது குறித்து தலைமைஆசிரியர் கிஷான் ரெட்டி கூறுகையில், நான் எனது சொந்தசெலவில் ஆட்டோ வாங்கியதே, மாணவர்கள் பாதுகாப்பாக பள்ளிக்கூடத்துக்கு சென்று திரும்பவேண்டும் என்பதாகும். அதேசமயம், வசதியாகவும், செலவு குறைவாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன்.
ஏராளமான கிராமங்களில் இருந்து மாணவர்கள் இந்த பள்ளியில் படிக்க விரும்பினாலும் போக்குவரத்து வசதி இல்லாததால் தயங்கினார்கள். இப்போது அந்த கவலையில்லை. மாணவர்கள் எண்ணிக்கையும் அடுத்த கல்வி ஆண்டில் 200 பேரைத் தாண்டும் என நம்புகிறேன் எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Please Comment