ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான தடகளப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் திருச்சி தேசிய கல்லூரி மாணவி ஏ.சந்திரலேகா தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.
புவனேசுவரத்தில் 58-வது தேசிய அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின் றன. அதில் திருச்சி தேசியக் கல்லூரியில் எம்எஸ்சி (யோகா) பயிலும் மாணவி ஏ.சந்திரலேகா பங்கேற்றுள்ளார்.
இவர், நேற்று முன்தினம் நடைபெற்ற பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் 11.47 விநாடிகளில் போட்டி தூரத்தைக் கடந்து, தங்கப் பதக்கம் பெற்றார்.
இவர், கடந்த ஆண்டு நடை பெற்ற 57-வது தேசிய அளவிலான தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றவர் ஆவார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஆனந்தனின் மகள் இவர். தான் பெற்ற வெற்றி குறித்து 'இந்து தமிழ்' நாளிதழிடம் சந்திரலேகா கூறியது:
பள்ளியில் படிக்கும் போதே மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளேன். அதன் பிறகு திருவண்ணாமலையில் உள்ள அரசு விளையாட்டு விடுதியில் சேர்ந்து பயிற்சி பெற்றேன். இந்த விடுதியில் இருந்த பயிற்சியாளர் விநாயக மூர்த்தியின் பயிற்சியாலும், ஊக்கத்தாலும் ஒரு தடகள வீராங்கனையாக உருவாகியிருக்கிறேன்.
அடுத்து 2020-ம் ஆண்டில் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று பதக்கங்கள் வெல்வதை இலக் காகக் கொண்டு, பயிற்சி பெற்று வருகிறேன். தற்போது பெற்றுள்ள தங்கப் பதக்கம் அதற்கு ஊக்கமளிப் பதாக அமைந்துள்ளது. இதுவே என் தந்தையின் கனவும் கூட.
தற்போது, முன்னாள் சர்வ தேச தடகள வீரர் பிரான்சிஸ் சகாயராஜிடம் பயிற்சி எடுத்து வருகிறேன். கல்லூரி நிர்வாகமும் எனக்கு முழு அளவில் ஒத்துழைப்பையும், நம்பிக்கை யையும் ஏற்படுத்தி வருகிறது.
கல்லூரி முதல்வர் சுந்தரராமன் புவனேசுவரத்தில் என்னைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்றார்.

No comments:
Post a Comment
Please Comment