வேற்றுக்கிரக உயிர்களைக் கண்டறிவதற்காக மிகப்பெரிய தொலை நோக்கியை உருவாக்கும் முயற்சியில் நாசா ! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வேற்றுக்கிரக உயிர்களைக் கண்டறிவதற்காக மிகப்பெரிய தொலை நோக்கியை உருவாக்கும் முயற்சியில் நாசா !


புறக் கோள்களைக் கண்டறியும் ஆய்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக மிகப்பெரும் தொலை நோக்கியை உருவாக்கும் முயற்சியை நாசா தொடங்கவிருப்பதாக அமெரிக்க தேசிய அறிவியல் கழகச் செய்திக் குறிப்பின் வழியாக அறிய முடிகிறது. இந்தத் திட்டத்திற்குத் தேவையான மிகப்பெரும் அளவிலான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


நிலத்திலிருந்தும் வானிலிருந்தும் நோக்கி ஆராயும் வகையில் இந்த தொலை நோக்கி அமையவிருக்கிறது. " இதன் வழியாக மனித குலத்திற்குக் கிடைக்கும் மிகப்பெரிய செய்தி என்னவென்றால், பூமி அல்லாத வேற்றுக் கிரகத்தில் உயிரினங்கள் ஏதேனும் வசிக்கின்றனவா என்னும் பல நூற்றாண்டு காலக் கேள்விக்கு விடை கிடைக்க இருப்பதுதான்" என்கின்றார் ஹார்வேர்டு பல்கலைக் கழக வானியல் ஆய்வாளர், டேவிட் ஷார்பொன்னே (David Charbonneau) என்பவர். "ஆய்வுக்குத் தேவையான நிதியை ஒதுக்கினால், இன்னும் 20 ஆண்டுகளுக்குள் இதற்கான விடையைக் கண்டு பிடித்துவிடலாம்." என நம்பிக்கையுடன் கூறுகிறார் இவர்.
தரையிலிருந்து உற்று நோக்கும் வகையில்
முக்கியமான ஏழு நோக்கங்களை முன்னிறுத்தி நாசாவுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு இருக்கும் எனக் கிடைத்திருக்கும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. வானிலிருந்து புறக் கோள்களை நேரடியாகக் காணக் கூடிய வகையில் சக்தி வாய்ந்த தொலை நோக்கியை உருவாக்குவது; தரையிலிருந்து உற்று நோக்கும் வகையில் மிகப் பெரிய தொலை நோக்கியை உருவாக்குவது; வானிலிருந்து நோக்கி நுண்ணலைகளைக் கண்டறிந்து ஆய்வு செய்யும் வகையில் தொலை நோக்கியை (Wide Field Infrared Survey Telescope (WFIRST) space-based telescope) உருவாக்குவது ஆகிய திட்டங்களும் இதில் அடங்கும்.


ஆய்வுக்காக ஏவப்பட்ட TESS செயற்கைக் கோள்
புறக் கோள்களைப் பற்றிய ஆய்வுக்காக ஏவப்பட்ட TESS செயற்கைக் கோள் (Transiting Exoplanet Survey Satellite) கடந்த ஜீலை மாதத்திலிருந்து தகவல்களைத் திரட்டி அனுப்பத் தொடங்கியிருக்கிறது. இந்த ஆராய்ச்சிக்கு உதவும் வகையிலான ஜேம்ஸ் வெப் வான்வெளி தொலைநோக்கித் (James Webb Space Telescope (Webb)) திட்டமும் 2021 ஆம் ஆண்டுக்குள் நிறைவு பெறவிருக்கிறது.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை வானியல் அறிஞர்கள் ஆவலோடு எதிர் நோக்கியுள்ளனர். ஆனால் அதற்கு ஆகும் அதிகப்படியான செலவுத் தொகையும், காலதாமதமும் அவர்களைக் கவலையடையச் செய்துள்ளன. அதனால் சில வானியல் அறிஞர்கள், இது போன்ற பெரிய திட்டங்களைக் கைவிட்டு, சிறிய திட்டங்களில் கவனம் செலுத்தி அவற்றை உரிய காலத்தில் செய்து முடிக்க வேண்டும் எனக் குரல் கொடுக்கின்றனர்.


குழுவினர் முழுமையாக நம்புகின்றனர்
அனைத்து கவனங்களையும், முதலீடுகளையும் குறிப்பிட்ட ஒரே திட்டத்தின் மீது மட்டுமே செலுத்துவது நல்லதல்ல எனச் சிலர் கருதுகின்றனர். ஒரு வேளை, அத்திட்டம் தோல்வியில் முடிந்தால் இழப்பு பெரிதாக இருக்கும் என அவர்கள் கூறுகின்றனர். ஆனால், மிகப் பெரிய முதலீட்டுடன் துணிச்சலாக முன்னெடுக்கும் இந்த ஆய்வுத்திட்டம் எதிர்பார்த்த பலனைக் கொடுக்கும் என அறிக்கை சமர்ப்பித்த ஆய்வுக் குழுவினர் முழுமையாக நம்புகின்றனர்.


புறக் கோள்கோள்களைக் கண்டறியும் ஆய்வுக் கூடம்
புறஊதாக் கதிர்களை ஆய்வு செய்யும் மிகப்பெரிய தொலை நோக்கி, உயிர்வாழ் புறக் கோள்கோள்களைக் கண்டறியும் ஆய்வுக் கூடம் ஆகியவை மிகப் பெரும் செலவு பிடிக்கக் கூடிய ஆய்வுத் திட்டங்களில் அடங்கும். பூமியிலிருந்து இயக்கக் கூடிய 30 மீட்டர் நீளம் கொண்ட மிகப்பெரிய தொலைநோக்கி ( ஹவாய் தீவில் அமைவதற்கான வாய்ப்பு உள்ளது), பிரமாண்டமான மெகல்லன் தொலைநோக்கி (Giant Magellan Telescope) (இது சிலியில் (Chile) அமைவதற்கான வாய்ப்பு உள்ளது) போன்ற திட்டங்களுக்குமான நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டு உள்ளது.


விண்மீன்களின் இயக்க நிலை
விண்மீன்களின் இயக்க நிலையைப் பொறுத்து கோள்களின் ஈாப்பு விசையில் ஏற்படும் சிறு தள்ளாட்டம், விண்மீன் மற்றும் தொலைநோக்கி ஆகியவற்றுக்கு இடையே கோள்கள் வரும் பொழுது விண்மீன் ஒளியில் ஏற்படும் சிறு மயக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் புறக் கோள்களின் நடமாட்டத்தைத் தற்போது கண்டறிந்து வருகிறோம். புறக் கோள்களைக் கண்டறிவதில் அடுத்த கட்டத்தை நோக்கிய தொழில்நுட்ப நகர்வுதான், தொலை நோக்கி வழியாக நேரடியாகப் புறக் கோள்களைக் கண்டறியும் திட்டமாகும்.


உயிர்களைக் கண்டறிய முற்படுவது சாத்தியமில்லை
புறக்கோள்களைப் பற்றிய காட்சிகளை நேரடியாகப் பதிவு செய்வதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும். புறக் கோள்களின் மேற்பரப்பில் என்ன நிகழ்கிறது என்பதை அப்பொழுதுதான் அறிய முடியும். புறக் கோள்களில் உயிர்களின் நடமாட்டம் ஏதேனும் இருப்பின் இதன் வழியாகத்தான் அறிய முடியும்.
ஒரு குறிப்பிட்ட புறக் கோளின் தன்மைகளை முழுமையாக அறியாமல் அக்கோளில் உள்ள உயிர்களைக் கண்டறிய முற்படுவது சாத்தியமில்லை என வானியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.


வேறு கிரகத்தில் மனித உயிர்கள் வாழ்வது சாத்தியமா?
அடுத்த இருபது ஆண்டுகளில் புறக் கோள்களைப் பற்றிய ஆய்வு எவ்வகையில் அமையும் அதனுடைய விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றிய முழுமையான தகவல்களை இந்த ஆய்வறிக்கை வழங்கியிருக்கிறது. பூமி அல்லாத வேறு கிரகத்தில் மனித உயிர்கள் வாழ்வது சாத்தியமா? என்கின்ற கேள்விக்கு விடை தேடுவதில் மனித சமூகம் மிக முக்கியமான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

No comments:

Post a Comment

Please Comment