தனது மனைவி கஸ்தூர்பா காந்தி, ஆசிரம விதிகளுக்கு எதிராக 4 ரூபாயை வைத்திருந்ததை சுட்டிக் காட்டி, மகாத்மா காந்தி எழுதிய கட்டுரை, உண்மை-ஒழுக்கநெறிகளில் யாராக இருந்தாலும் சமரசத்துக்கு இடமில்லை என்ற அவரது உயரிய குணத்துக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
தேசத் தந்தை என்று போற்றப்படும் மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட உள்ளது.
தான் மட்டுமன்றி தன்னை சுற்றியிருப்பவர்களும் உண்மையாகவும், ஒழுக்க நெறிகளை கடைப்பிடிப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற விருப்பம் உடைய காந்தி, தனது மனைவி உள்பட ஆமதாபாத் ஆசிரமத்தில் தன்னுடன் இருந்தவர்கள் சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டி கடந்த 1929-இல் நவ ஜீவன் வாரப் பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரையை தாம் எழுதுவதற்கான காரணத்தையும் அவர் குறிப்பிட்டிருந்தார். .
அதன் விவரம் வருமாறு: . எனது சுயசரிதை தொடர்பான கட்டுரைகளில், கஸ்தூர்பா காந்தியின் பல்வேறு நற்குணங்கள் குறித்து குறிப்பிட நான் ஒருபோதும் தயங்கியதில்லை. ஆனால், சில பலவீனங்களும் அவரிடம் இருந்தன. அவற்றை நான் குறிப்பிடாவிட்டால், நான் கடமை தவறியவன் ஆகிவிடுவேன். அதற்காகவே, இக்கட்டுரையை எழுதினேன். .
ஆமதாபாத் ஆசிரம விதிமுறைகளின்படி, அங்கு தங்கியிருப்பவர்கள் தங்களுக்கு சொந்தமாக பணத்தையோ வேறு பொருள்களையோ வைத்திருக்கக் கூடாது. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு, ஆசிரமத்துக்கு வந்திருந்த நபர்களிடம் இருந்து அன்பளிப்பாக கிடைக்கப் பெற்ற 100-200 ரூபாயை கஸ்தூர்பா தன்னிடம் வைத்திருந்தார். விதிகளுக்கு புறம்பாக அந்த பணத்தை அவர் வைத்திருந்தார். .
ஒரு முறை ஆசிரமத்துக்குள் திருடர்கள் நுழைந்த சம்பவம் நிகழ்ந்தது. அதன் பிறகுதான், கஸ்தூர்பா பணம் வைத்திருந்த விஷயம் அனைவருக்கும் தெரியவந்தது. அப்போது, தனது செயலுக்காக கஸ்தூர்பா வருத்தம் தெரிவித்தார். எனினும், அது நீண்ட நாள்களுக்கு நீடிக்கவில்லை. அவருக்குள் மனப்பூர்வமான மாற்றம் நிகழவில்லை; பணத்தின் மீதான நாட்டம் அவரிடம் மறையவில்லை என்பது பிறகொரு சம்பவத்தின் மூலம் நிரூபணமானது. .
இம்முறை, ஆசிரமத்துக்கு வந்தவர்கள் அன்பளிப்பாக அளித்த 4 ரூபாயை கஸ்தூர்பா வைத்திருப்பது தெரியவந்தது. ஆசிரம நிர்வாகத்திடம் அளிக்க வேண்டிய அந்த பணத்தை, கஸ்தூர்பா தன்னிடம் வைத்துக் கொண்டது திருட்டுக்கு ஒப்பானதே. .
எனினும், தனது செயலுக்கு மிகவும் வருத்தம் தெரிவித்த கஸ்தூர்பா, இனிமேல் இதுபோன்ற தவறு நடைபெறாது என்று உறுதிபட தெரிவித்தார். அப்படியொரு தவறு நிகழ்ந்தால், என்னையும் ஆசிரமத்தையும் விட்டே சென்றுவிடுவதாகவும் தெரிவித்தார். அப்போது அவரது வார்த்தைகளில் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. ஆசிரமமும் அவரது வருத்தத்தை ஏற்றுக் கொண்டது என்று தனது கட்டுரையில் காந்தி கூறியுள்ளார். .
உண்மை-ஒழுக்கநெறிகளில் யாராக இருந்தாலும் சமரசத்துக்கு இடமில்லை என்ற காந்தியின் உயரிய குணத்துக்கு எடுத்துக்காட்டாக இக்கட்டுரை உள்ளது. .

No comments:
Post a Comment
Please Comment