''மாணவர்கள், மொபைல் போனில் விளையாடுவதை தவிர்த்தால் கண் நலமாக இருக்கும்,'' என, டாக்டர் ரங்கநாதன் பேசினார்.நாமக்கல் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் சார்பில், கொல்லிமலை வாழவந்தி நாடு மாதிரிப் பள்ளியில், மாணவர்களுக்கு, கண் பாதுகாப்பு மற்றும் கண் நலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் தலைமை வகித்தார். அனைவருக்கும் கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் நந்தினிதேவி, கண் மருத்துவ உதவியாளர் இளங்கோ ஆகியோர் பேசினர். சங்க மாவட்ட திட்ட மேலாளர் டாக்டர் ரங்கநாதன் பேசியதாவது:
கண்கள் மூலம் தான் ஒவ்வொரு மனிதனும், தன்னுடைய, 80 சதவீத கல்வியை கற்கின்றனர். கண், நலமுடன் இருக்க, வைட்டமின், 'ஏ' சத்துள்ள உணவுகளான கேரட், பப்பாளி, இனிப்பு பூசணிக்காய், பச்சை கீரை காய்கறிகள், மீன், பால், முட்டை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றுவதால், பூஞ்சை கிருமி பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், கண்ணில் தூசி விழுந்தால், வாயில் ஊதி எடுப்பது, நாக்கு வைத்து எடுப்பது, ரூபாய் நோட்டு வைத்து எடுப்பது போன்ற பழக்கங்கள் மிகவும் தவறானவை. பள்ளிகளில், கண் பார்வை குறைபாடு உள்ள குழந்தைகள், கண்ணாடி அணிந்து கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர். அவர்களுடைய கண், சோம்பல் கண்ணாகி விடும் ஆபத்து உள்ளது.
மாணவர்கள், தற்போது படிக்கும் போது, கண் மங்கலாக இருப்பதாக மருத்துவரிடம் வருகின்றனர். பரிசோதனையில், பார்வை குறைபாடு இல்லை. அதற்கு காரணம், மொபைல் போனில் அதிகம் விளையாடுவதே. மாணவர்கள் மொபைல்போனில் விளையாடுவதை தவிர்த்தால் கண் நலமாக இருக்கும்.
இவ்வாறு, அவர் பேசினார்.

No comments:
Post a Comment
Please Comment