ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 2037 வரை இலவசக் கல்வி: கேரள முதல்வர் அறிவிப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 2037 வரை இலவசக் கல்வி: கேரள முதல்வர் அறிவிப்பு

கேரளாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒகி புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் குழந்தைகளுக்கு உயர் கல்வி வரையிலும் கல்வி இலவசமாக வழங்கப்படும் எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.







கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 29 மற்றும் 30-ம் தேதிகளில் வீசிய ஒகி புயலுக்குத் தமிழகம், லட்சத்தீவுகள், கேரளா ஆகியவை பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் ஒகி புயலில் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் கடலுக்குள் உயிரிழந்த சோகம் நடந்தது. கேரளாவில் மட்டும் 70 மீனவர்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் இதுவரை கரை திரும்பாத சோகம் தொடர்கிறது. அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்பதே சந்தேகமாக உள்ளது.








இந்த நிலையில், ஒகி புயல் பாதிப்பில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி அளிக்கப்படும் எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக கேரள அரசின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``கேரளாவில் ஒகி புயல் ஏற்படுத்திய பாதிப்பில் சிக்கிய மீனவக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் குறித்து அரசு சார்பாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி, சிறு குழந்தைகள் முதல் கல்லூரிக் கல்வியை முடித்தவர்கள் வரையிலும் மொத்தம் 194 பேர் இருப்பது தெரியவந்தது. அவர்களுக்கு அரசு சார்பாக உதவி செய்ய முடிவு செய்யப்பட்டு ரூ.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி பயிலும் மாணவர்கள் மட்டும் அல்லாமல் கல்லூரிக் கல்வியை முடித்துள்ள 124 பேருக்கு தொழிற்பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.


இந்தத் திட்டத்தின்படி, எல்.கே.ஜி முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 10,000 ரூபாயும் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 25,000 ரூபாயும் மேல்நிலைக் கல்வி பயில்வோருக்கு 30,000 ரூபாயும் கல்லூரிப் படிப்பு படிப்பவர்களுக்கு ஆண்டுக்கு 1,00,000 ரூபாய் வரையிலும் வழங்கப்படும். இந்தத் திட்டமானது வரும் 2037-ம் ஆண்டு வரையிலும் செயல்படுத்தப்படும்'' என அறிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

Please Comment