வெடிகளுக்குப் பதிலாக செடிகள்' - மாணவர்கள் மனம் கவர்ந்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வெடிகளுக்குப் பதிலாக செடிகள்' - மாணவர்கள் மனம் கவர்ந்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள்

வெடிகளைத் தவிர்த்து, செடிகளோடு தீபாவளி கொண்டாடுவோம்" என்கிற வாசகங்களோடு திருச்சி பேருந்து நிறுத்தம், பள்ளிகள் என மக்கள் கூடும் பகுதிகளில் கடந்த சில நாள்களாக நடந்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் மக்களின் மனதைக் கவர்ந்தது.









திருச்சியில் செயல்பட்டுவரும் யுகா பெண்கள் அமைப்பு சார்பில் அந்த அமைப்பின் தலைவர் அல்லிராணி பாலாஜி தலைமையில் சி.எஸ்.ஐ மெதடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெடிகளைத் தவிர்த்து, செடிகளோடு மாசில்லா தீபாவளி கொண்டாடும் வகையில் பள்ளி மாணவிகள் நூதனமுறையில் கொண்டாடினர். திருச்சி மாநகரக் காவல்துறை துணை ஆணையர் என்.எஸ். நிஷா, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், தீபாவளிப் பண்டிகையை மாசில்லாமல் கொண்டாடுவது குறித்து, `மாசில்லா தீபாவளி' மாணவிகளுக்குச் சூழல் பாதுகாப்பு வாசகங்கள் எழுதும் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டியில் மாணவர்கள் தங்கள் எண்ணங்களை அள்ளித் தெளித்தனர்..
மேலும், அந்தப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்புக்கும் தனித் தனியே போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் தேர்வானவர்களுக்கு பரிசுகளாக மரக்கன்றுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


கூடவே, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அந்தப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும், பள்ளியின் மாணவிகள் 3,000 பேர் ஒன்றிணைந்து புஷ்வானம் மத்தாப்பு வெடித்து சிதறுவதைப் போல, வெடிகளைத் தவிர்க்கும் வகையில் நூதன பிரசாரம் செய்தனர். நிகழ்ச்சியில் வெடிகளைத் தவிர்த்து மாசில்லா தீபாவளி கொண்டாடுவோம் என மாணவிகள், பள்ளி ஆசிரியர்கள், யுகா அமைப்பு நிர்வாகிகள் உறுதிமொழியேற்றனர்.


நிகழ்ச்சியில் மாணவிகள், ஒவ்வொரு விழாவின்போது, ஒரு செடிகளை நட்டுப் பராமரித்தால் பசுமை மலரும் என மகிழ்ச்சியோடு தெரிவித்தார்கள்.
செடியும் - துணிப்பையும்




இதேபோல் திருச்சியில் இயங்கிவரும், தண்ணீர் அமைப்பின் சார்பில் எடமலைபட்டி புதூர் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மத்தியிலும் பிளாஸ்டிக் தவிர்ப்போம், துணிப்பை எடுப்போம். `வெடிகளைக் குறைப்போம், செடிகளை வளர்ப்போம்' என்ற தலைப்பில் விழிப்பு உணர்வு வீதி நாடகம் நடத்தி அசத்தினர். தண்ணீர் அமைப்பின் செயலாளர் கே.சி.நீலமேகம் தலைமையில் நடந்த இந்த விழாவில், அந்த அமைப்பின் இணைச்செயலாளர் தாமஸ், பேராசிரியர் சதீஷ் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


மாணவர்கள் மத்தியில் மாற்று வேடங்களில் இருந்த கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்ற மாணவர்கள் மற்றும் கலைக்குழுவினர், வீதி நாடகத்தின் மூலம், வெடி வெடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், செடிகளை வளர்ப்பதின் நன்மைகள் குறித்தும், நெகிழிப் பைகளை தவிர்த்து துணிப்பையை பயன்படுத்துவது மற்றும் அதைத் தொடர்ந்து மாணவரிடையே நெகிழிப் பைகளில் தீமைகள் குறித்து விளக்கியதுடன், இறுதியாக `பிளாஸ்டிக்கைத் தவிர்ப்போம், துணிப்பையை எடுப்போம்'. `வெடிகளைத் குறைப்போம், செடிகளை வளர்ப்போம்' என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டு நாடகத்தைக் கண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சியின் முடிவில், மாணவர்களுக்கு மரக்கன்றுகள், துணிப்பைகள் வழங்கப்பட்டன. இந்த இரு நிகழ்ச்சிகளில் மாணவர்கள் செடிகளோடு வீடுகளுக்குச் சென்றது புதிய மாற்றங்களுக்கு வித்திடும்.

No comments:

Post a Comment

Please Comment