அரசு பள்ளியில் பிள்ளைகளை சேர்க்கும் மனநிலைக்கு பெற்றோர் வந்துள்ளனர் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அரசு பள்ளியில் பிள்ளைகளை சேர்க்கும் மனநிலைக்கு பெற்றோர் வந்துள்ளனர்


 புதுச்சேரி அரசு பள்ளிகளில் கடந்த 3 ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை 10 முதல் 15 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும், பிள்ளைகளை அரசு பள்ளியில் ேசர்க்க வேண்டும் என்ற மனநிலை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். 




புதுச்சேரி ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி கடந்த 29ம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. இக்கண்காட்சி நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா நேற்று மாலை நடந்தது. பள்ளி கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடு வரவேற்றார். கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கி, அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: இந்த அறிவியல் கண்காட்சியில் பங்கேற்ற அனைவருமே வெற்றியாளர்கள்தான். மாணவர்கள் அறிவியல் படைப்புகளை உருவாக்க வழிகாட்டியாக இருந்த ஆசிரியர்களுக்கும், அதற்கு ஒத்துழைப்பு கொடுத்து பெற்றோர்களுக்கும் பாராட்டுக்கள். புதுச்சேரியில் தனியார் பள்ளிகளை போல் கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப பள்ளிகளிலும் சிறப்பாக ஆங்கிலம் பேசக் கூடிய மாணவர்கள் உள்ளனர். தற்போது ஆசிரியர்கள் மத்தியில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. அனைத்து ஆசிரியர்களுக்கு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அகில இந்திய அளவில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. ஆனால், புதுச்சேரியில் கடந்த 3 ஆண்டுகளாக 10 முதல் 15 சதவீதம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். இது ஆசிரியர்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.






கடந்தாண்டு முதல்வரும், நானும் 4 ஆயிரம் ஆசிரியர்களை சந்தித்து கல்வித்தரத்தை உயர்த்த கருத்துகளை கேட்டோம். அப்போது பல ஆசிரியர்கள், மாணவர்களின் பின்புலம், பெற்றோர் ஒத்துழைப்பின்மை காரணமாக சில சிரமங்களை சந்திப்பதாக கூறினார்கள். அவர்களிடம் பெற்றோரை மாதம் ஒரு முறை பள்ளிக்கு வர அறிவுறுத்துங்கள். மாணவர்களின் கற்கும் திறன், உடல் நிலை, ஆர்வம் உள்ளிட்டவை கண்காணியுங்கள் என்று அறிவுரை கூறினோம். இத்தகைய முயற்சி அனைத்து பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது தனியார் பள்ளிகளில் அதிக செலவு செய்து பிள்ளைகளை சேர்க்காமல், அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என மனநிலை மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் கல்வித்துறை இணை இயக்குநர் குப்புசாமி, துணை இயக்குநர் (தொடக்க கல்வி) மைக்கேல் பெனோ, பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Please Comment