வங்காள முதல் மந்திரியாக இருந்தவர் காலஞ்சென்ற பி.ஸி.ராய். அவர் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு பி.ஏ, பட்டம் பெற்றார். பிறகு பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி இரண்டிற்கும் விண்ணப்பித்தார். மருத்துவக் கல்லூரியிலிருந்துதான் முதலில் பதில் வந்தது. அதில் சேர்ந்து படித்தார்.
அந்தக் காலகட்டத்தில் வாய்மொழித் தேர்வுக்கு அதிகாரியாக இருந்தவர் ஆங்கிலேயர் ஒருவர். ஒரு நாள் அந்த அதிகாரியின் கார் சாலை விபத்தில் மாட்டிக் கொண்டது. அப்போது அந்த வழியாகச் சென்ற பி.ஸி.ராய் விபத்தைப் பார்க்க நேரிட்டது. எனவே அவர் சாட்சி சொல்ல நேரிட்டது.
ஆங்கிலேயத் தேர்வு அதிகாரியின் கார் டிரைவர் மீதுதான் தவறு என்று தெள்ளத் தெளிய நீதி மன்றத்தில் பி.ஸி.ராய் சொல்லிவிட்டார். தேர்வு அதிகாரிக்குக் கோபம் வந்தது! தேர்வின்போது பி.ஸி.ராய்க்கு பெயில் மார்க் போட்டுவிட்டார்.
அடுத்த ஆண்டு மீண்டும் ராய் தேர்வுக்குப் போனார். அதே ஆங்கிலேயர்தான் தேர்வு அதிகாரி.
"இரண்டாவது தடவையாக தேர்வுக்கு வந்திருக்கிறாயா? என்று கேட்டார் தேர்வு அதிகாரி.
"ஆம்''
"சென்ற முறை உனக்கு யார் பெயில் மார்க் போட்டது தெரியுமா?''
ராய் சற்றும் தயங்கவில்லை. "நீங்கள்தான்!'' என்றார்.
இதற்கு தேர்வு அதிகாரி ஒன்றும் பேசவில்லை. மேலே ராயை ஒரு கேள்வியும் கேட்கவில்லை. ராய்க்கு பாஸ் மார்க் போட்டுவிட்டார். ராயின் வாய்மை வென்றது!
No comments:
Post a Comment
Please Comment