கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் புத்தகம் வாங்கிக் கொள்ள உதவியாக வேலூரைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவன் ரூ.9,300 நிதி கொடுத்தான்.
வேலூர் காட்பாடியை அடுத்த மெட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரின் மனைவி பிரியா. இவர்களின் இளைய மகன் சுஷாந்த் (12). அங்குள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கிறார். இந்த மாணவன், நடிகர் ரஜினியின் தீவிர ரசிகன். டிசம்பர் 12-ம் தேதி ரஜினி பிறந்தநாள் என்பதால், அவருக்குப் பரிசாக பொன்னாடை போர்த்த மாணவன் சுஷாந்த் விரும்பியுள்ளார்.
இதற்காக, பெற்றோர் சிறுக சிறுக கொடுத்த பணத்தைச் செலவழிக்காமல் சுஷாந்த் சேர்த்து வந்துள்ளார். இந்த நிலையில், கஜா புயலால் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை டி.வி., பத்திரிகைகளில் வெளியான செய்தி மூலம் அறிந்துள்ளார். குறிப்பாக, தன்னைப் போன்ற மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து சுஷாந்த் வருத்தப்பட்டுள்ளார்..
இதையடுத்து, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் புத்தகம் வாங்கிக் கொள்ள உதவி செய்ய வேண்டுமென சுஷாந்த் முடிவு செய்துள்ளார் . ரஜினிக்கு பிறந்தநாள் பரிசளிக்க சேமித்து வைத்திருந்த ரூ.9,300 பணத்தைப் பெற்றோர் மூலம் கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் நேற்று வழங்கினார் .
அப்போது பேசிய மாணவன் சுஷாந்த், ''கஜா புயலால் பாதிக்கப்பட்ட என்னைப் போன்ற மாணவர்களின் நிலைமையை உணர முடிகிறது.
அவர்கள் புத்தகம் வாங்கிக் கொள்ள உதவியாக நிதி கொடுத்துள்ளேன். இதற்காக, ரஜினி அங்கிள் கோபித்துக் கொள்ள மாட்டார். ஆனாலும், ரஜினி அங்கிள் பிறந்தநாளுக்கு கதர் துண்டையாவது பரிசளிப்பேன்'' என்றார்.
No comments:
Post a Comment
Please Comment