``அங்கு படிக்கவில்லை... கற்றுக்கொள்கிறார்கள்" -பின்லாந்து சென்றுவந்த அரசுப் பள்ளி மாணவர்கள் கருத்து - ThulirKalvi Blogs

Latest

Search This Site

``அங்கு படிக்கவில்லை... கற்றுக்கொள்கிறார்கள்" -பின்லாந்து சென்றுவந்த அரசுப் பள்ளி மாணவர்கள் கருத்து

அறிவியல், தொழில்நுட்பம், இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் அரசுப் பள்ளி மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அயல்நாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அனுப்ப அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. முதல் கட்டமாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் சிறந்து விளங்கும் 50 அரசுப் பள்ளி மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, கடந்த 20 -ம் தேதி, பின்லாந்து மற்றும் சுவீடன் நாடுகளுக்கு அனுப்பியது. தம் கல்விச் சுற்றுலாவை முடித்து 30 -ம் தேதி தாயகம் திரும்பினர். அவர்களை வரவேற்கும் விதமாக சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நிகழ்ச்சி ஒன்றை பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடுசெய்திருந்தது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பின்லாந்து நாட்டின் பயோ அகாடமி சி.இ.ஓ, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




பின்லாந்து சென்றுவந்த மாணவ மாணவிகள், தங்கள் கல்விச் சுற்றுலாகுறித்துப் பேசும்போது, "விமானம் ஆகாயத்தில் பறப்பதை பார்த்துக்கொண்டிருந்த நாங்கள், அந்த விமானத்திலேயே சென்றுவந்தது மிகப்பெரிய விஷயம். பின்லாந்தில் எல்லோருக்கும் இலவசக்கல்வி கொடுக்குறாங்க. அங்கு தனியார் பள்ளிகளே இல்லை. பள்ளிகளில் மாணவர்கள் கற்றுக்கொள்கிறார்கள், படிக்கவில்லை. கல்வி சார்ந்த அவர்களுடைய நடவடிக்கைகள் ஆச்சர்யமாக இருந்தது. எங்களுக்கு மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்தும் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது" என்று கூறினர்.
பின்லாந்து நாட்டின் பயோ அகாடமி சி.இ.ஓ லீசா பேசிகையில், "குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க நாங்கள் அவர்களைக் கூட்டிச்சென்றோம். அவர்கள் எங்களுக்கு தமிழைக் கற்றுக்கொடுத்தார்கள். உலகில் இதுபோன்ற ஏற்பாடுகளை யாரும் முன்னெடுத்ததில்லை. இத்தகைய சுற்றுலா ஏற்பாட்டைச் செய்த அமைச்சருக்கு நன்றி. பின்லாந்து நாட்டின் தூதர் இத்திட்டத்தைப் பாராட்ட வேண்டும் என்று நினைத்தார். அவரால் வர இயலவில்லை. தூதரின் வாழ்த்துச் செய்தியில், 'பின்லாந்து நாடு கல்வித் தரத்தில் எவ்வாறு உயர்ந்திருக்கிறதோ, அதேபோல இந்தியாவில் தமிழ்நாடு கல்வித் திட்டமும் உயர வேண்டும்' என்று கூறியுள்ளார்'' என்றார்.
பின்னர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "இந்தியாவில் முதன்முறையாக பள்ளிக் கல்வித்துறை வாயிலாக மாணவர்களை மேலைநாடுகளுக்கு அனுப்புவதற்கான பணிகளை 3 கோடி ரூபாய் செலவில் நாங்கள் மேற்கொண்டோம். பின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளுக்கு 50 மாணவர்கள் சென்று அம்மண்ணின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களை அறிந்தும், அவற்றின் தன்மைகளை எடுத்துச்சொல்லும் வகையிலும் மாணவர்கள் வந்துள்ளனர். மனித நேயத்தோடும், வெளிப்படைத்தன்மையோடும் எந்தவித சிபாரிசும் இல்லாமல், இச்சுற்றுலாவுக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கலை, தொழில்நுட்பம், கலாசாரம் இவை அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில் பல்வேறு பணிகளை மாணவர்களின் எதிர்காலத்தை மனதில்கொண்டு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இவை அனைத்திலும் தமிழகம் உலகத்தில் சிறந்த மாநிலமாக இருக்கும். தமிழக அரசு இதுபோன்ற பணிகளைத் தொடர்ந்து செய்யும்.
உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்பு மாணவர்களின் வகுப்பறைகள் விரைவில் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு, இன்டர்நெட் இணைப்பு கொடுக்கப்படும். நடுநிலை வகுப்பு மாணவர்களின் வகுப்பறைகள், ஸ்மார்ட் வகுப்பறைகளாக மார்ச் மாதத்திற்குள் மாற்றப்படும். பின்லாந்துக்குச் சென்றுவந்த மாணவிகள், 'பின்லாந்தில் தேர்வே கிடையாது' என்றனர். நம்முடைய நிலை வேறு. மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டுதான் மாநில அரசு செயல்படுகிறது. தனிச்சட்டங்களை நம்மால் கொண்டுவர இயலாது. இந்திய நாடு ஒருங்கிணைக்கப்பட்ட நாடு. நீட் தேர்வுக்கும், தணிக்கையாளர் தேர்வுக்கும் பயிற்சித் திட்டங்களை மேற்கொள்ள இருக்கிறோம். உங்கள் எதிர்காலத்தை மனதில்கொண்டுதான் எல்லா நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்கிறோம்" என்று பேசினார். 🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment