150 பொறியியல் கல்லூரி தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்தது அண்ணா பல்கலைக்கழகம்: இயக்குநர் அலுவலக அனுமதி கிடைக்காததால் நடவடிக்கை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

150 பொறியியல் கல்லூரி தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்தது அண்ணா பல்கலைக்கழகம்: இயக்குநர் அலுவலக அனுமதி கிடைக்காததால் நடவடிக்கை

தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலக அனுமதி இன்னும் கிடைக்காததால், 150 பொறியியல் கல்லூரிகளின் முதல் பருவத் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்திருப்பது தெரிய வந்திருக்கிறது. 





இதனால், தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ள முடியாமல் மாணவர்கள் அவதிக்கு ஆளாகியிருப்பதாக பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் உள்ள 500-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் ஒவ்வோர் ஆண்டும் மாணவர் சேர்க்கை நிறைவடைந்ததும், அனைத்து மாணவர்களின் கல்விச் சான்றிதழ்களும் கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு விடும். அங்கு, கல்லூரி வாரியாக மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, அனுமதி வழங்கப்படும். 




இவ்வாறு, அனுமதி கிடைக்கப்பெற்ற கல்லூரிகளுக்கு மட்டுமே, முதல் பருவத் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடும். 150 கல்லூரிகளுக்கு முடிவுகள் நிறுத்தம்: இந்நிலையில், 2018-19 கல்வியாண்டில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் மாதத்துடன் முடிந்துவிட்டது. அதன் பிறகு 5 மாதங்களாகிவிட்ட நிலையில், 150 பொறியியல் கல்லூரி மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணியை தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் முடிக்கவில்லை என புகார் தெரிவிக்கப்படுகிறது. 



இதன் காரணமாக, அந்தக் கல்லூரிகளுக்கு அனுமதி கிடைக்காததால், தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்திவைத்து மாணவர்களை பாதிப்படையச் செய்துள்ளதாக பேராசிரியர்கள் புகார் தெரிவித்தனர். இயக்குநர் அலுவலக சான்றிதழ் சரிபார்ப்பு தேவையற்றது: இதுகுறித்து கல்வியாளரும், தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகியுமான ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியது: தொழில்நுட்பம் பன்மடங்கு வளர்ந்துவிட்டது. 




அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. அதுமட்டுமின்றி, பொறியியல் கலந்தாய்வின்போது, அண்ணா பல்கலைக்கழகமே நேரடியாக அரசுத் தேர்வுகள் துறையிடமிருந்து பிளஸ் 2 மாணவர்களின் தேர்வு முடிவுகளை வாங்கிக் கொள்கிறது. அதனடிப்படையில், மாணவர் சமர்ப்பிக்கும் மதிப்பெண் பட்டியலை ஒப்பீடு செய்து சரிபார்த்த பின்னரே, கலந்தாய்வுக்கான அழைப்பு மாணவர்களுக்கு விடுக்கப்படுகிறது. எனவே, மாணவர்களின் பிளஸ் 2 சான்றிதழ்களை மீண்டும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் சரிபார்ப்பது என்பது தேவையற்றது. அவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்றாலும், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் உதவியுடன் ஓரிரு நாள்களில் சரிபார்ப்பை முடித்துவிட முடியும். 




5 மாதங்கள் என்பது தேவையற்றது. இதனால், தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ள முடியாமல் மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோரும், கல்லூரி நிர்வாகிகளும் அவதிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர் என்றார். இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் (பொறுப்பு) வெங்கடேசன் கூறியது: தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலக அனுமதி கிடைத்த கல்லூரிகளுக்கு மட்டும்தான் தேர்வு முடிவுகளை வெளியிட முடியும். 




அவ்வாறு அனுமதி கிடைக்காத நூற்றுக்கும் அதிகமான கல்லூரிகளுக்கு தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அனுமதி கிடைக்கப்பெற்றதும், முடிவுகள் வெளியிடப்பட்டுவிடும் என்றார்.

No comments:

Post a Comment

Please Comment