நாடு முழுவதும் 26 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றின் பட்டியல் பல்கலைக்கழக மானியக்குழு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
டெல்லியில் இந்திய திட்டமிடல், மேலாண்மை கல்வி நிறுவனம் (ஐ.ஐ.பி.எம்.), என்ற பெயரிலும், மேற்கு வங்காள மாநிலம் நாதியாவில் உயிரி ரசாயன கல்வி மானிய கமிஷன் என்ற பெயரிலும் 2 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவற்றின் மீது போலீசில் புகார் செய்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் நாடு முழுவதும் மேலும் 24 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றின் பட்டியலை பல்கலைக்கழக மானியக்குழு தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
அவற்றில் உத்தரபிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக 8, டெல்லியில் 7, மேற்கு வங்காள மாநிலம், ஒடிசா மாநிலங்களில் தலா 2, பீகார், கர்நாடகம், கேரளா, மராட்டியம், புதுச்சேரி மாநிலங்களில் தலா ஒரு போலி பல்கலைக்கழகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் சத்யபால்சிங் எழுத்து மூலம் அளித்த பதிலில், ' பட்டப்படிப்புகள், பட்ட மேற்படிப்புகள் நடத்திக்கொண்டு, தவறான விளம்பரங்களை வெளியிட்டு வரும் போலி பல்கலைக்கழகங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதன்மைச் செயலாளர்கள், கல்வித்துறை செயலாளர்களுக்கு கடிதங்கள் எழுதப்பட்டுள்ளது. தங்கள் பகுதியில் உள்ள போலி பல்கலைக்கழகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்திலும் போலி பல்கலைக்கழகங்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டு, அவற்றில் சேர வேண்டாம் என மாணவ, மாணவிகளை பல்கலைக்கழக மானியக்குழு எச்சரித்து வருகிறது.
அதையும் மீறி மாணவர்கள் சேர்வதால்தான் போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன ' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
fake, போலி பல்கலைக்கழகங்கள், மானியக்குழு
No comments:
Post a Comment
Please Comment