முதுநிலை மருத்துவப் படிப்பு: தமிழகத்துக்கு கூடுதலாக 56 இடங்கள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

முதுநிலை மருத்துவப் படிப்பு: தமிழகத்துக்கு கூடுதலாக 56 இடங்கள்

வரும் கல்வியாண்டில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தமிழகத்துக்கு கூடுதலாக 56 இடங்களை ஒதுக்க இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இது, முதல்கட்டமாக வழங்கப்பட்ட ஒப்புதல்தான் என்றும், அடுத்த சில நாள்களில் மேலும் 50 இடங்களுக்கு அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் மருத்துவக் கல்வி இயக்குநரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 





இதைத் தவிர, முதுநிலை மருத்துவ பட்டயப் படிப்புகளை, பட்ட மேற்படிப்புகளாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதால், அதன் வாயிலாகவும் மருத்துவக் கல்வி இடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தற்போதைய நிலவரப்படி 1250 முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன. அதில், அதிகபட்சமாக சென்னை மருத்துவக் கல்லூரியில் 213 இடங்கள் உள்ளன. 



அதைத் தொடர்ந்து ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 152 இடங்களும், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் 134 இடங்களும் இருக்கின்றன. இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற முதுநிலை மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால், எதிர்வரும் கல்வியாண்டில், மாநிலத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



இந்தச் சூழலில், தமிழகத்தில் முதுநிலைப் படிப்புகளுக்கு கூடுதலாக 157 இடங்களை ஒதுக்குமாறு இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகம் வலியுறுத்தியது. அதன் அடிப்படையில் தற்போது முதல்கட்டமாக 56 இடங்களை அதிகரிக்க மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. மேலும், 50 இடங்களுக்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, எம்பிபிஎஸ் படிப்பிலும் வரும் கல்வியாண்டில் 345 இடங்கள் அதிகரிக்கும் எனத் தெரிகிறது. கரூர் மருத்துவக் கல்லூரி புதிதாகத் தொடங்கப்பட உள்ளதால் அங்கு 150 இடங்களும், திருநெல்வேலி, மதுரை மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 195 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.

No comments:

Post a Comment

Please Comment