வெளிநாடு செல்லும் இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை அவசியம்  - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வெளிநாடு செல்லும் இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை அவசியம் 

அமெரிக்கக் குடியேற்ற விதிகளை வேண்டுமென்றே மீறியதாக 129 இந்திய மாணவர்கள் கைதுசெய்யப் பட்டிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. மேல்படிப்புக் காகவும் வேலை தேடியும் வெளிநாடு செல்லும் இளைஞர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். இடைத்தரகர்களின் பசப்பு வார்த்தைகளையும் போலி வாக்குறுதிகளையும் நம்பி, பெரும் பொருளையும் வாழ்க்கையையும் தொலைத்துவிடக் கூடாது. 




கல்வியோ, வேலைவாய்ப்போ அரசு சாளரம் அல்லது அரசு அங்கீகரித்த வெளிப்படையான அமைப்புகள் மூலம் மட்டுமே ஈடுபட வேண்டும். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்கலாம், படிக்கும்போதே வேலைசெய்து சம்பாதிக்கலாம் என்றெல்லாம் ஆசை வார்த்தைகள் கூறி, இந்திய மாணவர்களுக்கு வலை விரிக்கப்படுகிறது. அமெரிக்க அரசின் உள்துறை அமைச்சகப் பிரிவு மேற்கொண்ட ‘ரகசிய கேமரா உதவியுடனான பேட்டி காணும் நடவடிக்கை’ (ஸ்டிங் ஆபரேஷன்) மூலம் இது தெரியவந்திருக்கிறது. இந்திய வம்சாவழியைச் சேர்ந்த வேலைக்கு ஆள்சேர்க்கும் 8 முகவர்கள் கண்டிக்கப்பட்டுள்ளனர். 



வேலை தேடி வந்தவர்களை மாணவர்கள் என்று இத்தரகர்கள் மோசடியாகவும் முறைகேடாகவும் பதிவுசெய்துள்ளனர். அதற்காகப் பெருந் தொகையை ஒவ்வொருவரிடமிருந்தும் வசூலித்துள்ளனர் என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்த பார்மிங்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, அமெரிக்கக் குடியேற்றச் சட்டத்தை மீறியதாக மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ள விவகாரம் புதிதல்ல. இது திட்டமிட்ட மோசடி என்று புலனாய்வு நடவடிக்கைகள் வெளிப்படுத்தியிருப்பதுதான் புதிது. இவை டிரை-வேலி பல்கலைக்கழகம், ஹெர்குவான் பல்கலைக்கழகச் சம்பவங்கள், தனியார் நடத்தும் போலி ‘பட்டதாரி ஆலைகள்’ தொடர்பானவை. சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கி வேலை தேட உதவுபவை. உண்மையிலேயே மேல்படிப்புக்காக மாணவர்களைச் சேர்க்கும் பல்கலைக்கழகங்கள், அதற்கான நிறுவனங்களை மாணவர்களும் பெற்றோர்களும் சரியாக அடையாளம் காண உரிய ஏற்பாடுகளை அமெரிக்க அரசும் இந்திய வெளியுறவுத் துறையும் மேற்கொள்ள வேண்டும். படிப்புக்காகச் சேர்ந்து ஏமாந்த மாணவர்கள் வேறு, வேலைக்கு ஆள் சேர்க்கும் முகவர்கள் வேறு என்பதை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சரியாகக் கணித்துள்ளது. 




எனவே, பல்கலைக்கழகங்களில் படிக்கத் தகுதியுள்ள மாணவர்கள், வேறு பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிப்பைத் தொடர வெளியுறவு அமைச்சகம் உதவ வேண்டும். அவர்களுடைய கல்விக் கனவுகள் பாதிக்கப்படக் கூடாது. அமெரிக்காவில் வேலை தேட வேண்டும் என்ற உந்துதலில் 600-க்கும் மேற்பட்ட இந்திய இளைஞர்கள் முனைந்திருப்பது இச்சம்பவத்திலிருந்து தெரியவந்துள்ளது. வெளிநாடுகளுக்கு மாணவர்கள் செல்வதற்கு முக்கியக் காரணம், தரமான உயர் கல்வி, உயர் சம்பளம் என்பதை உணர்ந்து, அவற்றை இந்தியாவிலேயே தருவதற்கு அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இது இளைஞர்களின் விருப்பங்களைப் பூர்த்திசெய்வதுடன், இந்திய இளைஞர்களின் அறிவும் திறமையும் இந்தியாவுக்கே பயன்படவும் உதவும். உள்நாட்டில் வாய்ப்புகளை உருவாக்காமல் இச்சம்பவங்களை வேறு கோணத்தில் பார்ப்பதால் எந்தப் பலனும் இல்லை.

No comments:

Post a Comment

Please Comment