இன்னும் இரண்டு நாட்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கி விடும். மாணவர்கள், பயம், பதட்டம் இல்லாமல், ஆரோக்கியமான மனநிலையோடு தேர்வை எதிர்கொண்டால், மதிப்பெண்களை அள்ளலாம் என, கல்வியாளர்கள் அறிவுரை தெரிவித்துள்ளனர்.கோவை மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வை 348 பள்ளிகளில் இருந்து 35 ஆயிரத்து 723 மாணவர்கள் எதிர்கொள்கின்றனர். 116 மையங்களில் தேர்வு நடக்கிறது.
20 மாணவர்களுக்கு ஒரு அறை கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதோடு, முதன்மை கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை அதிகாரிகள் என, தேர்வு பாதுகாப்புக்கு, உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரும் 19ம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைகின்றன. ஏற்கனவே இரு பொதுத்தேர்வுகளை எதிர்கொண்டதால், பிளஸ் 2 மாணவர்களுக்கு, இத்தேர்வு நடைமுறைகள் புதிதல்ல.இருப்பினும், பயம், பதட்டம் இன்றி, தேர்வு எழுதும் மனநிலையை தற்போது உருவாக்கி கொள்வது அவசியம். இது மதிப்பெண்களை அள்ள உதவும் என்கின்றனர் கல்வியாளர்கள்.அவர்கள் கூறியதாவது:
தேர்வுக்கு இன்னும் இரு நாட்களே அவகாசம் இருப்பதால், இரவில் நீண்டநேரம் கண்விழித்து படிப்பது, ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல.
அதிகாலை விழிப்பும், சிறிது நேர யோகா, உடற்பயிற்சி, நடைப்பயிற்சிக்கு பின், படிக்க துவங்குவதும், புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். முழு பாடத்திட்டத்தையும் படித்தாலும், கேட்கப்பட்ட வினாக்களுக்கு மட்டுமே விடையளிக்க முடியும். வினா எண், பகுதி எண் மற்றும் அடித்தல் திருத்தல் இல்லாமல், உரிய விடையளித்தால் மதிப்பெண்களை அள்ளலாம். பல பக்கங்களுக்கு, வினாவுக்கு தொடர்பில்லாத விடை எழுதியிருந்தால், ஒரு மதிப்பெண் கூட கிடைக்க வாய்ப்பில்லை.
நேர மேலாண்மையே அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க உதவும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.நடப்பு பொதுத்தேர்வு சமயத்தில், உடல்நலக்குறைவு, விபத்து காரணங்களால் மருத்துவ சான்றிதழ் சமர்ப்பித்தாலும், எந்த சலுகையும் அளிக்க முடியாது என தேர்வுத்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. எனவே, குழந்தைகளை இருசக்கர வாகனங்களில் அனுப்பாமல் இருப்பது நல்லது.வெப்ப நோய்கள் தாக்காமல் இருக்க, தண்ணீர், இளநீர், பழங்கள், காய்கறிகள், கீரைகள் கொண்ட உணவு உட்கொள்ளலாம்.
உறவினர், அக்கம்பக்கத்தினரின் ஆலோசனைகளை குழந்தைகள் மீது திணிக்காமல், வீட்டில் ஆரோக்கியமான சூழலை உருவாக்கி தருவது, பெற்றோரின் தலையாய கடமை என்கின்றனர்
கல்வியாளர்கள்.நேர்மறை சிந்தனை முக்கியம்அரசு உளவியல் ஆலோசகர் அருள்வடிவு கூறுகையில், ''இத்தேர்வு மட்டுமே இறுதி வாய்ப்பாக கருதி, தேவையில்லாத படபடப்பை உருவாக்கி கொள்ள வேண்டாம். இதனால் அதிக மதிப்பெண் பெறும் வாய்ப்பை இழக்க நேரிடலாம். ஒரு தேர்வு முடித்தபின், விடைகளை தேடுவதை விட, அடுத்த தேர்வுக்கு தயாராகலாம். தோல்வியே அடைந்தாலும், மறு வாய்ப்பு உள்ளதை நினைவில் கொள்ள வேண்டும். பெற்றோர் நேர்மறையான சிந்தனையை ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்*
No comments:
Post a Comment
Please Comment