பெரியவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கக் கூடிய செயலியை உருவாக்கியதற்காக அமிர்தா பல்கலைக்கழகத்துக்கு அமெரிக்காவின் பார்பரா புஷ் அறக்கட்டளையின் முதல் பரிசு கிடைத்துள்ளது.
இது தொடர்பாக அமிர்தா வித்யா பீடம் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
அமெரிக்காவின் பார்பரா புஷ் அறக்கட்டளை சார்பில் பெரியவர்களுக்கு கல்வி புகட்டக் கூடிய சிறந்த செயலியை உருவாக்குபவர்களுக்கான போட்டி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டிக்கு பேராசிரியர் பிரேமா தலைமையிலான கோவை அமிர்தா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி, மேம்பட்ட தொழில்நுட்ப மையத்தின் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட 18 பேர் சேர்ந்து உருவாக்கிய "அமிர்தா லேர்னிங் ஆப்' என்ற ஆங்கிலம் கற்பிக்கும் செயலியை அனுப்பியிருந்தனர்.
இறுதிப் போட்டியில் அமிர்தாவின் செயலி உள்ளிட்ட 4 செயலிகள் கலந்து கொண்ட நிலையில், முதல் பரிசு அமிர்தா நிறுவனத்தின் செயலிக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து அண்மையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பேராசிரியர் பிரேமா, அமிர்தா கிரியேடிவ் குழுவைச் சேர்ந்த ரீட்டா சட்கிளிஃப் ஆகியோர் முதல் பரிசான 1.25 லட்சம் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.88.95 லட்சம்) பெற்றுக் கொண்டனர்.
அமிர்தாவின் செயலி அமெரிக்காவில் ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்டவர்களிடமும், ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகக் கொண்டவர்களிடம் வழங்கப்பட்டு, கடந்த 12 மாதங்களில் அவர்களின் மொழித் திறன் எப்படி வளர்ந்துள்ளது என்று சோதனை செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்த செயலியை அமெரிக்கர்கள் அதிக அளவில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர் என்பது தெரியவந்தது.
கதைகள் மூலமும், விளையாட்டு மூலமாகவும் ஆங்கிலத்தை போதிக்கக் கூடியதாக இருக்கும் இந்த செயலியை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
Please Comment