வரி விலக்கு பெறுவது எப்படி? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வரி விலக்கு பெறுவது எப்படி?

மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் பரவலாக வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் மாதாந்திர சம்பளதாரர்கள் மத்தியில் மிகுந்த விவாதப் பொருளாகிவிட்டது. 




குறிப்பாக ரூ. 5 லட்சம் வரை வரி கிடையாது என்ற அறிவிப்பால் ஆரம்பத்தில் மகிழ்ச்சியடைந்த சம்பள பிரிவினர் அதில் குறிப்பிடப்பட்ட வரிவிதிப்புக்குள்பட்ட வருமானம் ரூ. 5 லட்சம் வரை இருந்தால் வரி கிடையாது என்ற விவரத்தை அறிந்த பிறகு அதை எவ்வாறு எட்டுவது என்ற கணக்கீட்டில் தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டனர். மிகவும் எளிய முறையில் இதை எப்படி கணக்கிடலாம் என்பதைப் பார்க்கலாம். முந்தைய பட்ஜெட்டின்படி உங்களது வருமானத்தில் வரி விதிப்புக்குள்பட்ட தொகை ரூ. 5 லட்சமாக இருந்தால் அதற்கு நீங்கள் ரூ. 13 ஆயிரம் வருமான வரி செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் இனி அதை செலுத்த வேண்டியதில்லை என்பதுதான் பட்ஜெட்டில் அளிக்கப்பட்ட சலுகையாகும்.






 ஒரு வேளை வரி விதிப்புக்குள்பட்ட வருமானம் ரூ. 5 லட்சத்து 10 ஆக இருந்தால் நீங்கள் ரூ. 13,002 செலுத்த வேண்டும். அதாவது ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ. 10 லட்சம் வரையான தொகைக்கு 20 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதன்படி உங்களுக்கு அளிக்கப்பட்ட ரூ. 13 ஆயிரம் சலுகையும் கூடுதலான. 10-க்கு 20 சதவீத வரி ரூ. 2-ஐயும் சேர்த்து ரூ. 13,002 செலுத்த வேண்டும். ஒரு வேளை உங்களது ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சம் என வைத்துக் கொள்ளுங்கள். அதில் வரி விதிப்புக்குள்பட்ட வருமானம் ரூ. 5 லட்சமாக இருந்தால் நீங்கள் வரி செலுத்தத் தேவையில்லை. 




 80 சி பிரிவில் கிடைக்கும் வரிக் கழிவு வருமான வரிச் சட்டம் 80 சி-யின் கீழ் அதிகபட்சம் ரூ. 1.5 லட்சம் வரை வரிக் கழிவு பெறலாம். இதன்படி உங்களது வரிவிதிப்புக்குள்பட்ட வருமானம் ரூ. 8.5 லட்சமாகும். அதில் வீட்டுக் கடன் தவணை, குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம், காப்பீட்டுத் திட்டங்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்), பொது வைப்பு நிதி (பிபிஎப்), தாமாக முன்வந்து போடும் வைப்பு நிதி (விபிஎப்), நீண்ட கால தபால் அலுவலக சேமிப்புகள், ஓய்வூதிய திட்டங்கள், தேசிய சேமிப்பு பத்திரங்கள், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்கள், சுகன்ய சம்ருதி யோஜனா, ஈக்விடி-யுடன் இணைந்த சேமிப்பு திட்டங்கள், தேசிய ஓய்வூதிய திட்டம் (என்பிஎஸ்) போன்ற முதலீட்டு திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு வரிச் சலுகை பெறலாம். தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (பிரிவு-1) ஆண்டுக்கு ரூ. 50 ஆயிரம் சேமிப்பதாகக் கொண்டால் ரூ. 1.5 லட்சம் தவிர்த்து கூடுதலாக ரூ. 50 ஆயிரத்துக்கு சலுகை பெறலாம். அந்த வகையில் உங்களது சம்பளம் ரூ. 8 லட்சமாகும். மருத்துவ செலவுகளுக்கு 80 டி பிரிவின் கீழ் வரிக் கழிவு ரூ. 50 ஆயிரம் வரை பெறலாம். 




மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் செலுத்தும் பிரிமீயம் தொகை மற்றும் உங்கள் பெற்றோருக்கும் செலுத்தும் பிரிமீயம் தொகைக்கு வரிக் கழிவு கிடைக்கும். இவை அனைத்துமே 80-டி பிரிவின் கீழ் வருபவை. இதன்படி ரூ. 25 ஆயிரம் சலுகை பெறலாம். உங்கள் பெற்றோர் மூத்த குடிமக்களாக இருப்பின் அதிகபட்சம் ரூ. 50 ஆயிரம் வரை வரிக்கழிவு பெறலாம். இல்லையென்றால் உங்கள் குடும்பத்துக்கு ரூ. 25 ஆயிரம், உங்கள் பெற்றோருக்கு ரூ. 25 ஆயிரம் என அதிகபட்சம் ரூ. 50 ஆயிரம் வரிக்கழிவு கிடைக்கும். இதன் பிறகு உங்களது வரி விதிப்புக்குள்பட்ட வருமானம் ரூ. 7.5 லட்சமாகும். அடுத்ததாக புதிதாக வீடு வாங்குவதன் மூலம் இரண்டாவது வீட்டுக்கான வட்டித் தொகைக்கும் கழிவு கிடைக்கும்.




 இது பிரிவு 24-ன் கீழ் கிடைக்கும். அதாவது நீங்கள் குடியிருக்கும் வீட்டுக்கான செலுத்தும் வட்டி ரூ. 2 லட்சம் வரை வரிக் கழிவு கிடைக்கும். மற்றொரு வீடு கட்டி முடிக்கும் வரையில் அதற்கு செலுத்தும் வட்டிக்கு வரிக் கழிவு உண்டு. அவ்விதம் செலுத்தும் வட்டித் தொகையானது ஐந்து ஆண்டுகளுக்குக் கிடைக்கும். அந்த வகையில் ரூ. 2 லட்சம் வரை பெற முடியும். இதன் பிறகு உங்களது வரி விதிப்புக்குள்பட்ட வருமானம் ரூ. 5.5 லட்சம். இதையடுத்து 80இ பிரிவின் கீழ் உங்கள் கல்விக்கு அல்லது உங்கள் மனைவியின் கல்விக்கு அல்லது உங்களை பாதுகாவலராகக்கொண்டுள்ள குழந்தையின் கல்விக்கு செலுத்தும் கல்விக் கடனுக்கான வட்டிக்கு விலக்கு கிடைக்கும். 8 ஆண்டுகளுக்கு இந்த வகையில் நீங்கள் விலக்கு பெற முடியும். 




அந்த வகையில் ரூ. 30 ஆயிரம் வரை அதிகபட்சம் வரிக் கழிவு கிடைக்கும். இப்போது உங்களது வரி விதிப்புக்குள்பட்ட வருமானம் ரூ. 5.2 லட்சமாகிறது. இது தவிர சேமிப்பு மூலம் உங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 12 ஆயிரம் வருவதாகக் கொள்வோம். அதில் ரூ. 10 ஆயிரம் வரை 80 டிடிபி பிரிவின்கீழ் வரிக்கழிவாக பெறலாம். மூத்த குடிமக்களுக்கு இந்த சலுகை ரூ. 50 ஆயிரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வட்டி வருமானம் நிரந்தர சேமிப்பு மூலம் கிடைத்தாலும் இந்த சலுகை அளிக்கப்படும். 




 நன்கொடை அரசு அங்கீகரித்த அறக்கட்டளைகளுக்கு நன்கொடை வழங்குவதன் மூலம் 80 ஜி பிரிவின்கீழ் நன்கொடை அளித்த தொகையில் 50 சதவீதம் வரி விலக்கு கிடைக்கும். இந்த நன்கொடை அளவானது உங்கள் வரி விதிப்புக்குள்பட்ட வருமானத்தில் 10 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டியது கட்டாயம். இந்த பட்ஜெட்டில் நிரந்தர கழிவு வரம்பு ரூ. 40 ஆயிரத்திலிருந்து ரூ. 50 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல வாடகை வீட்டில் வசித்தால் நீங்கள் பெறும் வீட்டு வாடகைப் படி, விடுமுறை பயண படி ஆகியவற்றுக்கு உரிய பில் மற்றும் ரசீதை தாக்கல் செய்து விலக்குபெறலாம். மருத்துவ செலவுகளுக்கும் வரி விலக்கு உண்டு.

No comments:

Post a Comment

Please Comment