நவீன 'ஸ்மார்ட் டஸ்ட்பின்' தமிழகத்தில் அறிமுகம்...! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

நவீன 'ஸ்மார்ட் டஸ்ட்பின்' தமிழகத்தில் அறிமுகம்...!

பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வதற்காக 'ஸ்மார்ட் டஸ்ட்பின்' என்ற சீர்மிகு மறுசுழற்சி பரிசு எந்திர பயன்பாட்டை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- 








 'பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு' உருவாக்கிட தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழலுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டது. இது தமிழ்நாட்டு மக்களிடையே பெரும்வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் தண்ணீர் மற்றும் குளிர்பானங்களுக்கான பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாடு பொதுமக்களிடையே அதிகம் உள்ளது. 





பயன்படுத்தப்பட்ட இந்த பாட்டில்களை பொது இடங்களில் தூக்கி எறிவதால், அவைகளில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகிறது. அதனால் பல்வேறு நோய்கள் உருவாகி வருவதுடன், மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால்களில் அடைப்பை உண்டாக்கி சுற்றுச்சூழலுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, சுற்றுச்சூழல் பாதிப்புகளை தடுக்கவும், பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கவும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பெரும் வணிக வளாகங்கள், பஸ் மற்றும் ரெயில் நிலையங்கள், திரையரங்குகளில் நவீன 'ஸ்மார்ட் டஸ்ட்பின்' என்ற சீர்மிகு பிளாஸ்டிக் மறுசுழற்சி பரிசு எந்திரத்தின் பயன்பாட்டை, பிளாஸ்டிக் தயாரிப்பாளரின் விரிவாக்க பொறுப்பு (இ.பி.ஓ.) என்ற அடிப்படையில் சென்னையில் முதன்முறையாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். இந்த நவீன 'ஸ்மார்ட் டஸ்ட்பின்'-ல் போடப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள், குளிர்பான அலுமினிய டின்கள் நசுக்கப்பட்டு சேகரிக்கப்படும். அவ்வாறு 'ஸ்மார்ட் டஸ்ட்பின்'னில் போடப்படும் ஒவ்வொரு பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் குளிர்பான அலுமினிய டின்களுக்கு, அதில் உள்ள 'ரிவர்ஸ் வெண்டிங்' எந்திரம் மூலமாக சலுகை கூப்பன்கள் வழங்கப்படும். 




இந்த கூப்பன்களை கொண்டு மக்கள் குறிப்பிட்ட வணிக நிறுவனங்களில் பொருட்களை சலுகை விலையில் வாங்கி பயன்பெறலாம். இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர்-செயலாளர் டி.சேகர், கோல்டன் ஸ்டார் இனொவேஷன் நிறுவன இயக்குனர்கள் ஹெப்சிபா, அமலன் சாம்ராஜ், இணை நிறுவனர் உத்சவ் சஹ்னி, முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் கலந்துகொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்யும் இந்த நடைமுறை இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் மட்டும் வெற்றிகரமாக செயல்பாட்டில் உள்ளது. இந்த எந்திரத்தில் பிளாஸ்டிக் பாட்டிலை போட்டுவிட்டு, எந்த கடையில் சலுகை பெற வேண்டும் என்று விரும்புகிறோமோ அதை தேர்ந்தெடுக்க வேண்டும். அதைத்தொடர்ந்து வரும் துண்டுச்சீட்டில், அந்த கடையின் பெயர் மற்றும் சலுகை விவரங்கள் இடம் பெற்றிருக்கும். 




அதை அவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த சலுகையை அளிக்க பல நிறுவனங்கள் முன்வந்துள்ளன. உடல் மருத்துவ பரிசோதனை நிறுவனம், உணவகம், வாகனங்களை சுத்தப்படுத்தும் நிலையம் போன்றவை 15 சதவீத சலுகை அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளன. தங்க நகைக்கடை ஒன்று, கிராமுக்கு ரூ.50 வரை தள்ளுபடி அளிக்க முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பஸ் நிலையங்கள், சினிமா தியேட்டர்கள், ரெயில் நிலையங்கள், வணிக வளாகங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் இந்த எந்திரங்களை வைக்க தனி இடத்தை ஒதுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனி உத்தரவுகளை பிறப்பிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கோயம்பேடு பஸ் நிலைய வளாகத்தில் 4 எந்திரங்களும், பெரிய வணிக வளாகங்களில் 2 எந்திரங்களும் வைக்கப்படும். தற்போது பிளாஸ்டிக் பாட்டில்கள், குளிர்பான அலுமினிய டின்கள் மட்டுமே எந்திரத்துக்குள் போட அனுமதிக்கப்படுகின்றன. மேலும் பல பிளாஸ்டிக் பொருட்களை போட படிப்படியாக அனுமதி வழங்கப்படும். முற்றிலும் காலியான பாட்டில்களை மட்டுமே அதற்குள் போடலாம். இல்லாவிட்டால் பாட்டில் உள்ளே செல்லாது. 






 இந்த எந்திரங்களில் நசுக்கப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள், அலுமினிய டின்கள் வெவ்வேறு பயன்பாட்டுக்காக அதை மறுசுழற்சி செய்வோருக்கு வழங்கப்படும். இதன்மூலம் பிளாஸ்டிக் பொருட்களை ஆங்காங்கே வீசும் நிலை மாற்றப்பட்டுவிடும் என்று நம்பப்படுகிறது. அடுத்தகட்டமாக தமிழகத்தில் மேலும் பல பகுதிகளுக்கு இந்த எந்திரத்தின் சேவை விரிவாக்கப்படும் என்று தெரிகிறது.🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment