The story of the champions over obstacles ம ன்னார்குடிக்கு அருகே 'சவளக்காரன்' என்ற குக்கிராமத்தில் அமைந்துள்ளது அரசு ஆதிதிராவிடர் நலன் மேனிலைப்பள்ளி. இந்தப் பள்ளிக்கென்று நிலையான உடற்கல்வி ஆசிரியர் கிடையாது. முறையான விளையாட்டு மைதானம் கிடையாது.
அங்குள்ள ஊர் பஞ்சாயத்தார்களின் முயற்சியில் வயலுக்கு நடுவே சிறிய மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. விளையாடச் செல்லும் மாணவர்கள் பாசனத்திற்கு செல்லும் நீரைத் தாண்டித்தான் செல்ல வேண்டும்.
அப்படிப்பட்ட இடத்தில் விளையாடியவர்கள்தான் அதே ஊரைச் சேர்ந்த காவ்யாவும் ப்ரியதர்ஷினியும். கிராமங்களில் பரிச்சயமாக அல்லது எளிதில் அணுகக் கூடிய விளையாட்டாக கிரிக்கெட் இருக்கும்.
ஆனால், இவர்கள் கற்றது கால்பந்து. விளைவு, அகில இந்திய கால்பந்து கழகம் சென்ற ஆண்டு நடத்திய தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் தமிழக அணிக்காக வென்று தங்கம் பரித்தவர்களில் இருவர்களானார்கள் இவர்கள்.
அடிப்படைக் கட்டமைப்பு யாதுமில்லாத இடத்திலிருந்து தேசிய அளவில் வென்றது சாதனைத்தான். இரு மாணவிகளின் வெற்றியையும் மொத்த ஊரே கொண்டாடியது. ஒரு மாலைப்பொழுதில் பயிற்சியிலிருந்த இருவரையும் சந்தித்து பேசினோம்.
"நாங்க 12ம் வகுப்பு படிக்கிறோம்.
எங்க இரண்டு பேரோட குடும்பமும் விவசாயக் கூலிகள்தான். சின்ன வயசுல இருந்தே இங்க புட்பால் (football) விளையாடுவதைப் பார்த்துட்டு வர்றோம். இங்கு சீனியர்கள் விளையாடுவதைப் பார்க்கும்பொழுது, நாமும் விளையாட வேண்டும் என்று தோன்றும். அப்படிதான் விளையாட ஆரம்பிச்சோம். எங்களோட உடற்கல்வி ஆசிரியர் முத்துக்குமார். சார்தான் விளையாட்டைப் பத்தி எங்களுக்காக வீட்ல பேசினார். அதனால், வீட்ல தடுக்கலை. பயிற்சி எடுக்க, விளையாடுவதற்கு வெளியூர் போக ஸ்கூல் டீச்சர்ஸ்லாம் நிறைய சப்போர்ட் பபண்றாங்க. மாவட்ட,மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வருகிறோம்.
எல்லாத்துக்கும் காரணம் சார்தான்!" என்று இருவரும் ஒருமித்த குரலில் சொல்கிறார்கள்.
தொடரும் உடற்கல்வி ஆசிரியர் முத்துக்குமார், "நான் இப்பள்ளிக்கு 2012-ம் ஆண்டு பகுதிநேர உடற்கல்வி ஆசிரியராகப் பொறுப்பேற்றேன். அதுவரை இங்கு மைதானம் இல்லை. எந்தவித விளையாட்டுகளும் முன்னெடுக்கப்படவில்லை.
மேனிலைப் பள்ளிக்கென்று கண்டிப்பாக விளையாட்டு மைதானம் இருக்க வேண்டும். பலமுறை வற்புறுத்தியும் ஏற்பாடு செய்யப்படவில்லை. கிடைத்த ஊர் நிலத்தில், அதற்கேற்ப கால்பந்து பயிற்சி மட்டும் கொடுத்து வருகிறேன். நான் ஒரு கால்பந்து வீரர். நான் விரும்பிய விளையாட்டை மாணவர்களிடம் சேர்க்க வேண்டும் என்று விரும்பினேன்.
முதல் முறை மாணவர்களை விளையாட அழைத்துச் சென்றபொழுது, ஷூ, டி சர்ட் போன்ற எதுவும் இல்லை.
யூனிபார்மோடுத்தான் விளையாடினார்கள். ஒவ்வொருமுறையும் ஜெயிக்கும்பொழுது கிடைக்கும் பரிசுகள் மூலம் விளையாட்டு சார்ந்த தேவைகளை நிறைவேற்ற முடிந்தது. பந்து போன்ற பொருள்களுக்குப் பள்ளியில் உதவி செய்கிறார்கள். தொடர் முயற்சியின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கால்பந்தில் பேர் சொல்லும் பள்ளியாகவும்,
மாநில அளவில் திருவாரூருக்காக அதிகம் பங்கேற்கும் பள்ளியாகவும் செயல்பட்டு வருகிறோம். அந்த வகையில் காவ்யா, ப்ரியதர்ஷினியின் பங்களிப்பு முக்கியமானது. சென்ற ஆண்டு மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் திருவாரூர் மாவட்டம் மூன்றாம் இடம் பெற்றது. தனியார் பள்ளிகள் ஆதிக்கம் செலுத்தும் போட்டியில் அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகம் இடம்பெற்ற அணி வென்றது குறிப்பிடவேண்டியது'.
தொடர் வெற்றியின் காரணமாக காவ்யாவும் பிரியதர்ஷினியும் தமிழ்நாடு மாநில அணியில் இடம்பெற்றனர்.
கோவாவில் நடந்த தேசிய அளவிலான விளையாட்டில் பங்கேற்றனர். அதில் குறிப்பாக ஒரு சம்பவம், ஹரியானா அணி இந்திய அளவில் சவாலானது. காலிறுதி போட்டி அவர்களுடன் நடந்தது. முதல் கோல் போடுவதே கடினமாக இருந்தது. அப்பொழுது காவ்யா போட்ட முதல் கோல்தான் அணியை உற்சாகமாக வெற்றியை நோக்கி முன்னேற்றியது" என்றார்.
குடும்பமும் சூழலும் ஒத்துழைத்ததால் எந்த இடர்பாடும் வெற்றியைத் தடுக்க முடியாது என்பதை நிரூபித்திருக்கிறார்கள். இந்த முறை இந்திய அணியில் இருவராலும் இடம்பெற முடியவில்லை. கால்பந்தில் வெல்வதையே லட்சியமாகக் கொண்டு பயிற்சியைத் தொடர்கிறார்கள்... அதே மைதானத்தில்
No comments:
Post a Comment
Please Comment