`பத்து நாள் விடுமுறையா... வேண்டவே வேண்டாம்' - சோகத்தில் ஜப்பானியர்கள்! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

`பத்து நாள் விடுமுறையா... வேண்டவே வேண்டாம்' - சோகத்தில் ஜப்பானியர்கள்!

விடுமுறையா..? அய்யோ, வேண்டவே வேண்டாம்!' என்கிறார்களாம் ஜப்பானியர்கள். இதற்குப் பின்னால் இருக்கும் சம்பவங்களும் அதற்கான காரணங்களும் மிகவும் சுவாரஸ்யமானவை. 




 ஜப்பானில், மே முதல் வாரத்தில் அரசியல் அமைப்பு தினம், பசுமை தினம், குழந்தைகள் தினம் என்று வரிசையாக அரசு விடுமுறை நாள்கள் வருகின்றன. இரண்டு விடுமுறை தினங்களுக்கும் நடுவில் வரும் நாளையும் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்பது அந்நாட்டின் சட்டமாக உள்ளது. 




இதனால், ஜப்பானில் ஆண்டுதோறும் மே முதல் வாரம் 'தங்க வாரம்' (Golden Week) என்ற நீண்ட விடுமுறை நாள்களாகக் கடைபிடிக்கப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, ஜப்பான் பேரரசர் அகிஹிடோ, தனக்கு 85 வயதாவதால் அரசர் பதவியைத் துறப்பதாக அறிவித்தார். அவர் பதவியை ஏப்ரல் 30-ம் தேதி துறக்க உள்ளதையடுத்து, அவரது மூத்த மகனும் இளவரசருமான நருஹிடா, புதிய பேரரசராக மே 1-ம் தேதி முடிசூட உள்ளார். 



இந்த இரண்டு நாள்களும் அரசு விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதனால், இந்த ஆண்டு ஏப்ரல் 27 முதல் மே 6-ம் தேதி வரை தொடர்ந்து10 நாள்கள் அரசு விடுமுறை தினங்களாக வருகின்றன. ஆனால், இந்த விடுமுறையைப் பெரும்பாலான ஜப்பானியர்கள் விரும்பவில்லை என்பதுதான் இதில் சுவாரஸ்யமே. 'அசாஹி ஷிம்பன்' என்ற நாளிதழ் நடத்திய ஆய்வில், '45 சதவிகிதம் பேர் இந்த நீண்ட விடுமுறை நாள்கள் தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை' என்று தெரிவித்துள்ளனர். 35 சதவிகிதம் பேர் மட்டுமே மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். 




 "பத்து நாள்கள் விடுமுறையில் என்ன செய்வது என்றே தெரியவில்லை", "விடுமுறை நாள்களில் எங்காவது சுற்றுலா போகலாம் என்றாலும், எல்லா இடங்களிலும் மக்கள் கூட்டம்தான் நிரம்பியிருக்கும். அதனால் வீட்டிலேயே இருக்கப்போகிறேன்", "எப்போதும் பிஸியாக வேலை செய்யும் எனக்கு, இந்த விடுமுறையை என்ன செய்வது என்றே தெரியவில்லை" என்றெல்லாம் சுவாரஸ்யமான கருத்துகள் இந்த ஆய்வில் வெளிவந்துள்ளன. 



 இதில் உச்சக்கட்ட சுவாரஸ்யம் என்னவென்றால், பத்து நாள்களும் நர்சரிகள், பள்ளிகள் அனைத்துக்கும் விடுமுறை விடப்பட்டிருக்கும் என்பதால், 'வீட்டில் இருக்கும் குட்டிப் பட்டாளங்களை எப்படிச் சமாளிப்பது' என்று பெற்றோர்களும் நீண்ட விடுமுறைக்கு சோக ஸ்மைலி காட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment

Please Comment