Collector's advice to government officials to perform a special election process சிறப்பான தேர்தல் பணியினை மேற்கொள்ள அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை
மக்களவை தேர்தலில் கோவை மாவட்டத்தில் அனைத்து நிலை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு சிறப்பான தேர்தல் பணியினை மேற்கொள்ள கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணி அறிவுரை வழங்கினார். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் ராசாமணி மக்களவை தேர்தல் பணிமேற்கொள்வது தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர், உதவித்தேர்தல் நடத்தும் அலுவலர்கள், முதன்மை தொடர்பு அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனை கூட்டத்தில் பொள்ளாச்சி மக்களவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், உதவித்தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பிரசன்னராமசாமி, சுரேஷ், ரவிக்குமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக முதுநிலை மண்டல மேலாளர் மேனகா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பழனிசாமி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ராசாமணி பேசியதாவது :கோவை மாவட்டத்தில் தேர்தல் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மக்களவை தேர்தல் பணிகளில் நமது மாவட்டத்தில் அலுவலர்கள் அனைவரும் சிறப்புடன் பணியாற்றி வருகிறார்கள்.
இதுவரை மேற்கொண்ட பணிகளைக் காட்டிலும், இனிவரும் எஞ்சிய நாட்களில் அனைத்து நிலை அலுவலர்களும் விழிப்புடனும், துடிப்புடனும் பணியாற்றுவது அவசியமாகும்.
கண்கானிப்புக் குழுக்கள், நிலையான கண்கானிப்பு குழுக்கள், கண்காணிப்பு பணிகளை துரிதப்படுத்திட வேண்டும். முறைகேடாகவும், போதிய ஆவணங்கள் இல்லாமலும் கொண்டுசெல்லும் எவ்வித ரொக்கம், பரிசுப்பொருட்கள் மற்றும் இதரபொருட்கள் எதுவானாலும் உரிய விசாரணைகளின் அடிப்படையில் பறிமுதல் செய்திடல் வேண்டும். அதுபோலவே நாளை (இன்று) நடைபெறும் இரண்டாம் கட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகளில் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களையும் பங்கேற்க செய்ய வேண்டும். கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டமுத்தூர், கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றது.
தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் பயிற்சி பெறும் மையங்களிலேயே தபால் வாக்குகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட படிவம் 12யு பணியானை மற்றும் வாக்காளர் அடையா அட்டை ஆகியவற்றினை இணைத்து தபால் வாக்கினை செலுத்தலாம். பயிற்சி பெறும் அனைத்து வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கும் வாக்குப்பதிவு பயிற்சி புத்தகங்கள் வழங்குதல் வேண்டும். மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குப்பதிவு நாளுக்கு முன்னதாகவே, வாகன வசதியுடன் அந்தந்த வட்டாரங்களில் தயார் நிலையில் உள்ளதை உதவித்தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உறுதி செய்திடல் வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்ககள் மூலம் கண்காணிக்கப்படும்.
வாக்குப்பதிவு நிலைய அலுவலர்கள் வாக்குப்பதிவு நிர்வாக செயலியின் மூலம் உடனுக்குடன் வாக்குப்பதிவு சதவிகிதம் தொடர்பாக பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.
வாக்குச்சாவடிகளில் தேவையான வசதிகளை வாக்குப்பதிவு நாளுக்கு முன்னதாகவே சம்பந்தப்பட்ட உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உறுதி செய்திடல் வேண்டும். வாக்குச்சாவடி நிலையத்தில் பணியாற்றும் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதுடன், பணிகள் தொடர்பாக தங்களுக்குள் கலந்துபேசி நிறைகுறை மற்றும் விவரங்கள் தெரிந்து கொள்வதுடன், மேற்கொண்டெழும் சந்தேகங்களை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடமோ, தேர்தல் நடத்தும் அலுவலர்களையோ அணுகி தெளிவடைய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
மக்களவை தேர்தல்
14,746 அலுவலர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி கோவை, ஏப். 8: மக்களவை தேர்தலை முன்னிட்டு கோவை மற்றும் பொள்ளாச்சி மக்களவை தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நேற்று நடைபெற்றது.
இதனை கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணி, தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணியமர்த்தப்பட்டுள்ள அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கும் மையமான (ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி) தனியார் கல்லூரி பயிற்சி மையத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின் மாவட்ட கலெக்டர் ராசாமணி நிருபர்களிடம் கூறியதாவது: கோவை மற்றும் பொள்ளாச்சி மக்களவை தொகுதிகளுக்குட்பட்ட தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டமுத்தூர், கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகளில் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில் 3070 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் தேர்தல் பணிமேற்கொள்ள ஆசிரியர்கள் மற்றும் அனைத்துத்துறை அரசுப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்படும் வகையில் 14746 நபர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் கடந்த மார்ச் 24ம் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. மேலும் பயிற்சி பெறும் அனைத்து வாக்குச் சாவடி நிலைய அலுவலர்களுக்கும் வாக்குப்பதிவு பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் உதவி தேர்தல் அலுவலர் கொண்டு இப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.
கடந்த தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்றது. தற்பொழுது நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் நாம் யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை வாக்காளர்கள் அறிந்துகொள்ளும் வகையில் வி.வி.பேட் என்னும் இயந்திரம் அமைக்கப்படவுள்ளது. தேர்தல் பணி என்பது மிக முக்கிய பணியாகும். அச்சிறப்பு வாய்ந்த பணிகளை அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றி சிறந்த முறையில் தேர்தல் நடைபெற ஒத்துழைத்தல் வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment
Please Comment