மின்னணு குடும்ப அட்டைகளை அனைத்து மாவட்டங்களிலும் அச்சிடும் பணி: தமிழக அரசு ஒப்புதல் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மின்னணு குடும்ப அட்டைகளை அனைத்து மாவட்டங்களிலும் அச்சிடும் பணி: தமிழக அரசு ஒப்புதல்

மின்னணு குடும்ப அட்டைகளை அனைத்து மாவட்டங்களிலும் அச்சிடும் பணி: தமிழக அரசு ஒப்புதல் 





தமிழகத்தில் மின்னணு குடும்ப அட்டைகளை (ஸ்மார்ட் அட்டைகளை) அச்சிடும் பணியை அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ள மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, சென்னையில் நான்கும், பிற மாவட்டங்களுக்கு தலா ஒன்றும் என மொத்தம் 35 மின்னணு குடும்ப அட்டை அச்சிடும் இயந்திரங்களை நிறுவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான நிதியையும் அரசு ஒதுக்கியுள்ளது. 



தமிழகத்தில் நியாய விலைக் கடைகளில் உணவுப் பொருள்களை அளிக்க வழக்கமான அட்டைகளுக்குப் பதிலாக, ஸ்மார்ட் கார்டுகள் (மின்னணு குடும்ப அட்டைகள்) கடந்த ஆண்டில் இருந்து அளிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இதுவரை 2.03 கோடி குடும்பங்களுக்கு ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. புதிதாக குடும்ப அட்டைகளை பெறுவதற்காக விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல் துறையின் இணையதளத்தில் (www.tnpds.gov.in) இதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. 




தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிமுறைகள் காரணமாக விண்ணப்பங்களைப் பரிசீலித்து புதிய அட்டைகளை அளிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அட்டைகள் அச்சிடுதல்: தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு புதிய அட்டைகள் அளிக்கப்பட இருப்பதாக உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், புதிய அட்டைகளை அச்சிடும் பணி தொடர்பான சிக்கல்களும் இப்போது தீர்க்கப்பட்டுள்ளன. 


மின்னணு குடும்ப அட்டைகளை அனைத்து மாவட்டங்களிலும் அச்சிடும் பணி: தமிழக அரசு ஒப்புதல் 

 இதுகுறித்து, உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறியது: புதிய விண்ணப்பங்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் அளிக்கும் பணி அடுத்த 10 நாள்களில் தொடங்கும். இதற்கென தேர்தல் ஆணையத்திடம் தனியாக அனுமதி பெறப்படவில்லை. சிறிது நாள்களே இருப்பதால் தேர்தல் நடத்தை நெறிமுறைகளில் இருந்து விலக்கு கோரவில்லை. புதிய விண்ணப்பங்கள் அதிகளவு இருப்பதால் அவற்றைப் பரிசீலித்து அட்டைகளை அளிக்கும் பணிகள் தேர்தலுக்குப் பிறகு தொடங்கும். இதுவரை தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சென்னையில் வைக்கப்பட்டுள்ள இயந்திரங்களின் மூலமாகவே மின்னணு குடும்ப அட்டைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. 



 இந்த நிலையில், மின்னணு குடும்ப அட்டைகளை அச்சிடுவதற்கான இயந்திரங்களை மாவட்டந்தோறும் அளிக்க முடிவு செய்யப்பட்டது. 31 மாவட்டங்களுக்கு தலா ஒரு இயந்திரமும், சென்னைக்கு நான்கு இயந்திரங்களையும் பெறுவதற்கு தமிழக உணவுத் துறை பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரைகளை ஏற்று இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்காக நிதித்துறை துறை ஒப்புதல் அளித்துள்ளது. 



இதையடுத்து, தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு மே மாத இறுதியில் மின்னணு குடும்ப அட்டைகளை அச்சிடுவதற்கான இயந்திரங்கள் வாங்கப்படும். மாவட்டங்களுக்கு இந்த இயந்திரங்களை அளிப்பதன் மூலம் புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கு சிரமம் இல்லாமல் அட்டைகள் கிடைப்பதுடன், திருத்தங்களையும் உடனுக்குடன் அந்தந்த மாவட்டங்களிலேயே மேற்கொண்டு அட்டைகளை உடனடியாகப் பெற முடியும் என்று தெரிவித்தனர்.


No comments:

Post a Comment

Please Comment