எமிஸ் முறையில் ஆசிரியர்கள் கலந்தாய்வு: பள்ளிகள் திறக்கும் முன்பு விவரம் தயாரிக்க உத்தரவு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

எமிஸ் முறையில் ஆசிரியர்கள் கலந்தாய்வு: பள்ளிகள் திறக்கும் முன்பு விவரம் தயாரிக்க உத்தரவு

எமிஸ் முறையில் ஆசிரியர்கள் கலந்தாய்வு: பள்ளிகள் திறக்கும் முன்பு விவரம் தயாரிக்க உத்தரவு




>

தமிழகத்தில் உள்ள பள்ளிகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் ஆன்லைனில் பதிவு செய்யப்படுகின்றன. இதற்காக எமிஸ் (எஜிகேஷன் மேனேஜ்மென்ட் இன்பர்மேஷன் சிஸ்டம் - இஎம்ஐஎஸ்) என்ற திட்டமுறை செயல்படுத்தப்பட்டது. இந்த கல்வியியல் மேலாண்மை தகவல் மைய திரட்டிற்காக கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களின் ஆதார் அட்டை உள்ளிட்ட விவரங்களும் பதிவு செய்யப்படுகிறது. 




ஒவ்வொரு கல்வியாண்டும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை, வகுப்பு வாரியாக அவர்கள் பெறும் நலத்திட்ட உதவிகள், அப்பள்ளிக்கு தேவையான ஆசிரியர்கள் மற்றும் பணியில் உள்ள ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர் எண்ணிக்கை, அவர்களது சுய விவரங்கள் உள்ளிட்ட அனைத்தும் இந்த தகவல் தொகுப்பில் இடம்பெறும். வரும் கல்வியாண்டு முதல், இந்த 'எமிஸ்' திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 




>

இந்த இணையதள தகவல் தொகுப்பில் அரசு பள்ளிகள் மட்டுமின்றி அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் விவரங்களை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டு பணிகள் நிறைவு நிலையை எட்டியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம், நெல்லை சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கல்வி மாவட்ட அலுவலர்கள் (சேரன்மகாதேவி) சுடலை, (வள்ளியூர்) விஜயலட்சுமி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் நாராயணன் ஆகியோர் 'எமிஸ்' திட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விளக்கமளித்தனர். 




எமிஸ் திட்டத்தில் கல்வித்துறை சம்பந்தமான அனைத்து விதமான புள்ளி விவரங்களும் இருக்கும். இதனை சமீபத்திய நாட்களின் அடிப்படையில் அப்டேட் செய்திருக்க வேண்டும். இப்புள்ளி விவரங்களே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு வரும் கல்வியாண்டில் கல்விப்பணி தொடர்பான நடைமுறைகள் செயல்படுத்தப்படும். மாணவர்களுக்கு தேவையான நலத்திட்டங்கள், இலவச கல்வி உபகரணங்கள் உள்ளிட்டவை எளிதாக வழங்க முடியும். ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் காலியிடம், உபரி இடம் உள்ளிட்ட 17 வகையான தகவல்கள் இதில் இடம் பெற்றிருக்கும். 




இதன் மூலமே ஆசிரியர்கள் கலந்தாய்வும் நடைபெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே வரும் கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்னதாக அனைத்து பள்ளிகள், மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பிற விவரங்களை துல்லியாக எமிஸ் பதிவில் ஏற்றியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய அலுவலர்கள், ஆர்எம்எஸ்ஏ, எஸ்எஸ்ஏ அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






எமிஸ் முறையில் ஆசிரியர்கள் கலந்தாய்வு: பள்ளிகள் திறக்கும் முன்பு விவரம் தயாரிக்க உத்தரவு

No comments:

Post a Comment

Please Comment