நீட் தேர்வு:தமிழகத்தில் 48% தேர்ச்சி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

நீட் தேர்வு:தமிழகத்தில் 48% தேர்ச்சி

நீட் தேர்வு:தமிழகத்தில் 48% தேர்ச்சி 


நீட் தேர்வு:தமிழகத்தில் 48% தேர்ச்சிஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. நாடு முழுவதும் 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுதியிருந்த நிலையில், அவர்களில் 7.97 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேசிய அளவில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நளின் காந்தேல்வால் 701 மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பிடித்தார். 



 தமிழகத்தைப் பொருத்தவரை மொத்தம் 1.23 லட்சம் பேர் தேர்வெழுதியிருந்தனர். அவர்களில் 59,785 பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த இரு ஆண்டுகளாக 40 சதவீதத்துக்கும் குறைவாக இருந்த மாநிலத்தின் தேர்ச்சி விகிதம் இம்முறை 48.70 சதவீதமாக உயர்ந்துள்ளது. இருந்தபோதிலும், முதல் 50 இடங்களுக்குள் தமிழக மாணவர்கள் எவரும் வராதது ஏமாற்றமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. பொன்னேரி வேலம்மாள் போதி பள்ளியைச் சேர்ந்த மாணவி சுருதி, தேசிய அளவில் 57}ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். 



மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ள அவர் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு 685 மதிப்பெண் பெற்றுள்ளார். இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 5}ஆம் தேதி நடைபெற்றது. கடந்த ஆண்டில் 56.27 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதம், இம்முறை 56.50}ஆக மட்டுமே அதிகரித்துள்ளது. வழக்கம் போலவே, நிகழாண்டிலும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 



தேசிய தேர்வு முகமை வெளியிட்ட தகவல்களின் படி 4.45 லட்சம் மாணவிகளும், 3.51 லட்சம் மாணவர்களும் தகுதி மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. தமிழ் வழியில் 31,239 பேர் தேர்வெழுதிய நிலையில், அவர்களில் 2.06 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாக தேர்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி, நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 30,455 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 36 ஆயிரம் இடங்களும் உள்ளன. அதேபோன்று பல் மருத்துவத்துக்கான பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு கல்லூரிகளில் 2,930 இடங்களும், தனியார் கல் லூரிகளில் 24,130 இடங்களும் உள்ளன. இதனிடையே, மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் பரிந்துரைத்திருந்ததைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களில் நாட்டின் பல மாநிலங்களில் புதிய கல்லூரிகள் நிறுவப்பட்டு செயல்பட உள்ளன.



 இதனால் மருத்துவக் கல்வி இடங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பொதுவாக, ஒரு மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்வி இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் போக, மீதமுள்ளவை மாநில ஒதுக்கீட்டுக்காக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 23}ஆவது இடத்தில் தமிழகம்: தேசிய தேர்வு முகமை வெளியிட்ட தகவல்களின்படி நீட் தேர்வு முடிவுகளில் தமிழகம் 23}ஆவது இடத்தைப் பிடித்திருப்பது தெரியவந்துள்ளது. 





கடந்த 2017 நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் 38.83 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 2018}இல் அது 39.56 சதவீதமாக மட்டுமே உயர்ந்தது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தேர்ச்சி விகிதத்தில் தமிழகம் 35}ஆவது இடத்தில் கடந்த ஆண்டு இருந்தது. தற்போது 23 } ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment