5வது முறை முயன்று ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மகாராஷ்டிரா இளைஞர்!
”மன உறுதி, வெற்றிக்கான விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு இருந்தால் யார் வேண்டுமானாலும், ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெறலாம்.”
இப்படிச் சொல்கிறார் மகராஷ்டிராவைச் சேர்ந்த சையது ரியாஸ் அகமது. இதை சொல்ல ரியாஸ் அகமதுக்கு முழுத் தகுதியும் இருக்கிறது. ஏனெனில், அவர் இந்த குணங்களை எல்லாம் வெளிப்படுத்தி ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி கண்டவர்.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ரியாஸ் அகமது, தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல், மீண்டும் மீண்டும் ஐ.ஏ.எஸ் தேர்வில் (யு.பி.எஸ்.சி) வெற்றி பெற முயற்சித்து, தனது 5வது முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்.
2018 தேர்வில் அவர், 271 வது இடம் பிடித்து தேர்வாகியிருக்கிறார்.
ஏழைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ரியாஸ் அகமது, பல்வேறு சோதனைகளையும், தடைகளையும் கடந்து ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம், ஐ.ஏ.எஸ் கனவில் இருக்கும் அனைவருக்கும் ஊக்கம் தரும் முன்னுதாரணமாக விளங்குகிறார்.
விளம்பு நிலையில் உள்ளவர்கள், பின் தங்கியவர்கள், தலித்கள் ஆகியோருக்கு, சரியான வாய்ப்பும், ஊக்கமும் அளிக்கப்பட்டால் அவர்கள் ஐ.ஏ.எஸ் தேர்வில் சாதிப்பார்கள் என்றும் ரியாஸ் அகமது நம்பிக்கையுடன் கூறுகிறார்.
12 ம் வகுப்பில் தோல்வி அடைந்த தான், தோல்விகளால் துவண்டுவிடாமல், ஐந்து முறை தேர்வு எழுதி, இறுதியில் ஐஏ.எஸ் ஆகியிருப்பதாகக் கூறும் அகமது, கடினமாக முயற்சிக்கத் தயாராக இருப்பவர்களுக்கு தோல்வி தடை கல் அல்ல என்கிறார்.
சையது ரியாஸ் குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தது. அவரது தந்தை மூன்றாம் வகுப்பு வரையே படித்தவர். தாய் ஏழாம் வகுப்பு வரை படித்திருந்தார்.
பெற்றோர் இருவரும், தங்கள் மகன் ரியாஸ், ஐஏ.ஏஸ் ஆகவேண்டும் என்று ஆசை வைத்தனர், இருப்பினும் பல தோல்விகளால் நம்பிக்கை இழந்தனர்.
ஆனால், தடைகளை கண்டு துவண்டுவிடாமல் முயற்சிப்பதற்கான ஊக்கத்தை அவரது தந்தை அளித்திருந்தார். கனவுகளை நினைவாக்கிக் கொள்ள கடினமாக முயற்சிப்பதை தவிர வேறு வழியில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
தந்தையின் இந்த அறிவுரைகளே சையது ரியாசுக்கு ஊக்கம் அளித்தன.
2014 ம் ஆண்டு முதல் அவர் தொடர்ச்சியாக ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற முயன்று வந்திருக்கிறார். முதல் இரண்டு முயற்சிகளில் தோல்வி அடைந்த நிலையில், மூன்றாவது முறை நேர்காணல் வரை சென்றார். நான்காவது முறை மீண்டும் தோல்வி அடைந்தார்.
ஆனாலும் அவர் மனம் தளர்ந்துவிடவில்லை.
மிகுந்த ஊக்கத்துடன் 2018 தேர்வுக்கு தயாரானார். இந்நிலையில், உறவினர்களும், நண்பர்களும், இது மிகவும் ரிஸ்கானது என அவரிடம் கூறினார். குடும்பம் கஷ்ட நிலையில் இருக்கும் சூழலில், தொடர்ந்து தேர்வு எழுதி முயற்சிப்பது தேவையா? என அவர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்த கருத்துகள் சையது ரியாஸ் முடிவை மாற்றவில்லை. அவரை விட தந்தை இதில் மிகவும் உறுதியாக இருந்தார். மகன் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெறுவதற்காக தனது வீட்டை கூட விற்கத் தயார் என்று அவர் தீர்மானமாக கூறிவிட்டார்.
இதனிடையே ரியாசுக்கு மகாராஷ்டிரா வனத்துறையில் வேலை கிடைத்தது. அவர் பயிற்சிக்காக உத்தர்காண்ட் சென்றார். இப்போது குடும்பத்தின் மீது நிதிச்சுமை இல்லை என்பதால், அவர் தனது முயற்சியில் இன்னும் தீவிரமாக, கவனம் செலுத்தினார்.
வனத்துறை வேலை தனது இலக்கு அல்ல, ஐ.ஏ.எஸ் ஆவதே கனவு எனும் முடிவுடன், வல்லுனர்களின் ஆலோசனையை நாடினார். மேலும் ஜாமியா மில்லியாவின் பயிற்சியிலும் இணைந்தார். இந்த விடா முயற்சியின் காரணமாக, 5வது முயற்சியில் அவர் வெற்றி பெற்று, அகில இந்திய அளவில் 271 வது இடத்தில் தேர்வாகி இருக்கிறார்.
மிகவும் சாதாரண பின்னணியைச் சேர்ந்த சையது ரியாஸ், ஏழ்மை மற்றும் குடும்ப சூழலை மீறி, விடாமுயற்சியால் யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்று ஐ.ஏ.ஏஸ் ஆகியிருப்பதன் மூலம், அவரைப்போன்ற எண்ணற்ற இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார்.
5வது முறை முயன்று ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மகாராஷ்டிரா இளைஞர்!

No comments:
Post a Comment
Please Comment