நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் 60% பழைய மாணவர்கள்!
கடந்த 5ஆம் தேதி வெளியான நீட் தேர்வு முடிவில், அதிக மதிப்பெண் பெற்றவர்களில் 60 விழுக்காட்டினர் பழைய மாணவர்கள் என மருத்துவ கல்வி இயக்குநரக வட்டாரம் தெரிவித்துள்ளன.
இந்தியா முழுவதும் நடைபெற்ற 50-க்கும் மேற்பட்ட மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வுகளை ஒழுங்கு படுத்தும் வகையில், இந்திய மருத்துவ கவுன்சில் கடந்த 2012-ம் ஆண்டு நீட் தேர்வை அறிவித்தது.
அதைத் தொடர்ந்து 2013-ம் ஆண்டு மே மாதம் 5-ம் தேதி நடத்தப்பட்டது. நீட் தேர்வுக்கு எதிராகத் தொடரப்பட்ட 115 வழக்குகளில், 2013-ம் ஆண்டு ஜூலை 18-ம் நாள் உச்சநீதிமன்றம் நீட் தேர்வுக்குத் தடை விதித்தது. மேல் முறையீட்டில், மீண்டும் 2016-ம் ஆண்டு ஏப்ரல்-11 அன்று உச்சநீதிமன்றம் நீட் தேர்வு மீதான தடையை விலக்கியது. அதைத் தொடர்ந்து நிரந்தரமாக நீட் தேர்வு நடத்தப்படுவதற்கான சட்டம் கடந்த 19, ஜூலை 2016-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
அந்த ஆண்டு இரண்டாம் கட்டமாக நீட் தேர்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் நிரந்தர நீட் விலக்கு கோரப்பட்ட நிலையில் 2017-18-ம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடத்தப்பட்ட வருகிறது.
மொத்தம் உள்ள மருத்துவ படிப்பு சேர்க்கையில் பெரும்பாலான இடங்கள் பழைய மாணவர்களுக்கு போகும் என்பதால், முதல் முறையாக தேர்வு எழுதிய மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 40 விழுக்காடு இடங்களே கிடைக்க வாய்ப்பிருப்பதால் அவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
இந்த நிலையை மாற்ற, மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்கான வரையறை நிர்ணயிப்பதோடு மட்டுமின்றி கடுமையான கட்டுபாடுகளை விதிக்க வேண்டும் என புதிய மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment
Please Comment