ஸ்மார்ட் மீட்டருக்காக சாப்ட்வேரில் மாற்றம்: கட்டணம் செலுத்துவதற்கு ஒரு நிமிடம் தாமதித்தாலும் மின்சாரம் துண்டிப்பு
தமிழகத்தில் 2.3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்காக சாப்ட்வேரில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதன்பிறகு ஒரு நிமிடம் தாமதித்தாலும் மின்சாரம் துண்டிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் ஒரு சில இடங்களில் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தி சோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் முதல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஸ்மார்ட் மீட்டரில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, குறைபாடுகள் சரி செய்யப்பட்ட பிறகு ஸ்மார்ட் மின்மீட்டர் பொருத்தும் பணிகள் தொடங்கப்படும்.
ஸ்மார்ட் மின்மீட்டரில் ஆன்லைன் வசதிக்காக சிப் (மோடம்) பொருத்தப்பட்டு இருக்கும். இதன்மூலம் அனைத்து மின் இணைப்புகளையும் நேரடியாக கனிணியில் கண்காணிக்க முடியும். இதற்காக, மின்வாரிய சாப்ட்வேரில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி, குறிப்பிட்ட தேதிக்குள் மின்சார கட்டணம் செலுத்த ஒரு நிமிடம் தாமதித்தாலும், மின் இணைப்பு தானாகவே துண்டிக்கப்படும் வகையில் கணினியில் பதிவுகள் செய்யப்படும்.
அதேபோல் மின் கட்டணம் செலுத்தியதும், மின் இணைப்பு கிடைத்துவிடும். முன்கூட்டியே கட்டணம் செலுத்தியும், அதற்கேற்ப மின்சாரம் பயன்படுத்திக் கொள்ளலாம். மின் நுகர்வோரின் செல்போன் எண்களும் கனிணியில் பதிவு செய்யப்படும். இதன்மூலம் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தி இருக்கிறார்கள்? என்பது உள்ளிட்ட விவரங்களை செல்போனிலேயே அறிந்து கொள்ள முடியும். கட்டணம் செலுத்த வேண்டிய விவரங்கள் உட்பட அனைத்தும் செல்போனில் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும்.
இதுதவிர பல்வேறு வசதிகளை செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தும்போது, வங்கி கணக்கில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. அதற்கான, குறுஞ்செய்தியும் செல்போனுக்கு வந்துவிடுகிறது. ஆனால், சர்வர் கோளாறு காரணமாக மின்வாரியத்துக்கு கட்டணம் சென்றடைவதில்லை. நாங்கள் செலுத்திய தொகை 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் வங்கி கணக்கிற்கே வந்துவிடுகிறது.
அப்போதுதான், கட்டணம் செலுத்தப்படவில்லை என்பதை தெரிந்து கொள்கிறோம். இதற்கிடையில், கட்டணம் செலுத்த தவறியதாக மின்வாரியத்தில் அபராதம் விதிக்கப்படுகிறது. எனவே, கட்டணம் செலுத்திய விவரங்கள் தொடர்பாக உடனடியாக குறுஞ்செய்தி அனுப்புவதில் மின்வாரியம் அக்கறை செலுத்த வேண்டும். இதேபோல் மின்சார பயன்பாட்டை கணக்கெடுப்பதில் உள்ள பல்வேறு குளறுபடிகளை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

No comments:
Post a Comment
Please Comment