சித்தா, ஆயுர்வேத படிப்புகள்: மாணவர் சேர்க்கை குறைய வாய்ப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சித்தா, ஆயுர்வேத படிப்புகள்: மாணவர் சேர்க்கை குறைய வாய்ப்பு

சித்தா, ஆயுர்வேத படிப்புகள்: மாணவர் சேர்க்கை குறைய வாய்ப்பு 




சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கு கலந்தாய்வு அறிவிப்பு தாமதமாவதால், நிகழாண்டில் மாணவர் சேர்க்கை குறைய வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டிலும் பெரும்பாலான கல்லூரிகளில் பாரம்பரிய மருத்துப் படிப்புகளுக்கான இடங்கள் நிரம்பாமல் காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட அலோபதி மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடைபெறுகிறது. 


இந்நிலையில் சித்தா, ஹோமியோபதி, யுனானி, ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. அதற்கான சுற்றறிக்கையை கடந்த ஆண்டே ஆயுஷ் அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியது. ஆனால், இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் 1970-இல் இடம்பெற்றுள்ள ஒரு ஷரத்தை காரணமாகக் காட்டி கடந்த ஆண்டில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே தமிழகத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. 



ஆனால், அந்த அறிவிப்பும்கூட காலதாமதமாக வெளியிடப்பட்டதால் அரசு மற்றும் தனியார் கல்லுரிகளில், 40 சதவீத மருத்துவ இடங்கள் நிரம்பாமல் இருந்தன. இது பல்வேறு விமர்சனங்களுக்கு வித்திட்டது. இந்நிலையில், நிகழாண்டில் நீட் தேர்வு மூலமாக மட்டுமே பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது. ஆனால், இதுவரை அதுதொடர்பான அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பு வெளியாகவில்லை. அதேபோன்று, கலந்தாய்வு, விண்ணப்ப விநியோகம் உள்ளிட்ட தகவல்களும் வெளியாகவில்லை. இந்த காலதாமத நடவடிக்கைகள் மாணவர் சேர்க்கையைப் பாதிக்கும் எனத் தெரிகிறது. 



இதுகுறித்து, கல்வியாளர்கள் சிலர் கூறியதாவது: கடந்த ஆண்டில் அலோபதி மருத்துவம், கால்நடை மருத்துவம், பொறியியல் படிப்புகளின் கலந்தாய்வு நிறைவடைந்த பிறகு பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதால் 40 சதவீத இடங்கள் நிரம்பாமல் இருந்தன. நிகழாண்டில் தமிழகத்தில், 48.57 சதவீதம் பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள போதிலும், அவர்களில் 90 சதவீதத்துக்கும் மேலானோர் எம்பிபிஎஸ் படிப்பில் சேரவே விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர். 



கலந்தாய்வில் இடம் கிடைக்காதவர்கள் பிடிஎஸ் படிப்பைத் தேர்வு செய்கின்றனர் அல்லது அடுத்த ஆண்டு மீண்டும் நீட் தேர்வு எழுதத் திட்டமிட்டுள்ளனர். எனவே, இந்த ஆண்டு எத்தனை பேர் பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பார்கள் எனக் கூற இயலாது. நிச்சயமாக கடந்த ஆண்டைப் போலவே மாணவர் சேர்க்கை குறையும் என்பது தெளிவாகத் தெரிகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Please Comment