யோகா - இயற்கை மருத்துவப் படிப்பு தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 28-இல் கலந்தாய்வு தொடக்கம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

யோகா - இயற்கை மருத்துவப் படிப்பு தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 28-இல் கலந்தாய்வு தொடக்கம்

யோகா - இயற்கை மருத்துவப் படிப்பு தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 28-இல் கலந்தாய்வு தொடக்கம் 


யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. நிகழாண்டில் மொத்தம் 1, 631 பேருக்கு தரவரிசை வழங்கப்பட்டுள்ளது. இதில், 194.50 கட்-ஆப் மதிப்பெண்கள் பெற்ற மாணவி ஜெயகாயத்ரி தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவத் துறை வளாகத்தில் வரும் 28-ஆம் தேதி தொடங்கும் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை அறிவித்துள்ளது. 


 அன்றைய தினம் சிறப்புப் பிரிவினருக்கும், 161 வரை கட்- ஆப் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதற்கு அடுத்த நாளில் (ஆக.29) மற்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லுரிகளில் பி.என்.ஒய்.எஸ். எனப்படும் இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு 600-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. குறிப்பாக, அரசுக் கல்லூரியில் 60 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு 385 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 192 இடங்களும் உள்ளன. 


 இந்நிலையில், அந்தப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நிகழாண்டு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்ப விநியோகம், கடந்த மாதத்தில் நடைபெற்றது. ஆன்லைன் வாயிலாகவும், யோகா - இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் நேரடியாகவும் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பங்களைப் பெற்றனர். அவற்றில் 1, 688 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. 


 இந்த நிலையில், அந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகமானோர் இம்முறை யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பித்திருப்பதாக இந்திய மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கலந்தாய்வு மற்றும் தரவரிசைப் பட்டியல் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு www.tnhealth.org , www.tnmedicalselection.org ஆகிய இணையதளப் பக்கங்களை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment