அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படும்: அமைச்சர் கமலக்கண்ணன் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படும்: அமைச்சர் கமலக்கண்ணன்

அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படும்: அமைச்சர் கமலக்கண்ணன் 


புதுவையில் அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தெரிவித்தார். புதுவை சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் வெளியிட்ட அறிவிப்புகள்: 



காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு நிலையத்தில் எம்.பி.ஏ. (சுற்றுலா மேலாண்மை) பிரிவு தொடங்குவதற்கான செயற்குறிப்பு அரசின் கருத்துகையில் உள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள பாடப் பிரிவுகள் வேலைவாய்ப்புகள் அடிப்படையில் 2020-21 ஆம் கல்வியாண்டில் கலை, அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் தொடங்கப்படும். ஆசிரியர், நூலகர், உடற்கல்வி இயக்குநர் ஆகிய பதவிகளில் உள்ள காலியிடங்கள் அனைத்தும் மாதமொன்றுக்கு ரூ. 25 ஆயிரம் ஊதியத்துடன் குறுகிய கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிரப்பப்படும். 



அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 வரை படித்த மாணவர்களுக்காக அனைத்து அரசுக் கல்லூரிகளிலும் 50 சதவீத சேர்க்கை இடங்களை ஒதுக்கீடு செய்ய உத்தேசிக்கப்பட்டது. எஞ்சிய 50 சதவீத இடங்கள் தனியார் பள்ளிகளில் படித்து முடித்துள்ள மாணவர்களைக் கொண்டு நிரப்பப்படும். பெருந்தலைவர் காமராஜர் நிதியுதவித் திட்டம் அரசு பள்ளி, கல்லூரிகளில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே வழங்க வரையறை செய்யப்படும். மற்ற மாணவர்களுக்கு வருவாய் அளவுகோல் நிர்ணயிக்கப்படும். அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படும். தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள 44 தீயணைப்பு வீரர்கள், 5 ஓட்டுநர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும். 



புதிதாக 4 சிறிய ரக உயர்மீட்பு நுரையூர்த்திகள் மத்திய அரசின் நிதியுதவி மூலம் வாங்கப்படும். பாகூர் தீயணைப்பு நிலையத்துக்கு புதிய கட்டடம் நிகழாண்டு கட்டி முடிக்கப்படும். மணிலா சாகுபடியாளர்களுக்கு செலவின மானியம் ரூ. 5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப் பரிசீலிக்கப்படும். வேளாண்மை மற்றும் தொட்டக்கலையில் பட்டயப் படிப்பு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதியின்றி ஆழ்துளைக் குழாய் கிணறுகளைப் பயன்படுத்தினால் முதல் முறையாக ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். 



தொடர்ந்து, தவறு செய்தால் ரூ. 10 ஆயிரம் அபராதம் அல்லது 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும். நடப்பாண்டில் 60 மின் மாற்றிகள் அமைக்கப்படும். பணிக் காலங்களில் விபத்துக்குள்ளாகும் மின் துறை ஊழியர்களின் நலனுக்காக ரூ. 10 லட்சம் வரை விபத்துக் காப்பீடு கிடைக்கும் வகையில் குறைந்த மாதாந்திரக் கட்டணத் தொகையுடன் கூடிய விபத்துக் காப்பீடு செய்து தரப்படும். 24 மணி நேரமும் செயல்படக் கூடிய கணினி மயமாக்கப்பட்ட மின் நுகர்வோர் குறைதீர் மையம் அமைக்கப்படும். விவசாயப் பண்ணைக் கருவிகள் கொண்ட மையம் தொடங்கப்படும்.

No comments:

Post a Comment

Please Comment