சென்னை புத்தக கண்காட்சி வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது.
இதன் முன்னோட்டமாக ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் 5 ஆயிரம் மாணவ-மாணவிகள் புத்தகங்களை வாசித்து சாதனை படைத்தனர்.
புத்தக கண்காட்சி
தென் இந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின்(பபாசி) சார்பில் 43-வது சென்னை புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 9-ந்தேதி தொடங்குகிறது. 21-ந்தேதி வரை 13 நாட்கள் இந்த புத்தக கண்காட்சி நடைபெறுகிறது.
வேலைநாட்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கண்காட்சி நடைபெறும்.
இந்த புத்தக கண்காட்சியின் முன்னோட்டமாக ‘சென்னை வாசிக்கிறது’ என்ற நிகழ்ச்சியை ‘பபாசி’ சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று நடத்தியது.
புத்தகம் வாசித்து சாதனை
பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் இடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் 5 ஆயிரம் பேர் பங்கேற்று ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் புத்தகங்களை வாசித்தனர்.
அதாவது பபாசி வழங்கிய புத்தகங்களை சுமார் 30 நிமிடங்கள் அவர்கள் தமிழில் வாசித்தனர்.
இந்த சாதனை நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளுடன் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். சென்னை மாவட்ட கலெக்டர் சீதாலட்சுமி, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் மற்றும் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் விஜயராகவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
சான்றிதழ்
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு பங்களிப்பு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம், செயலாளர் எஸ்.கே. முருகன், பொருளாளர் ஆ.கோமதிநாயகம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

No comments:
Post a Comment
Please Comment