5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - ThulirKalvi Blogs

Latest

Search This Site

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து

கடும் எதிர்ப்பு எதிரொலி: 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து தமிழக அரசு அறிவிப்பு

கடும் எதிர்ப்பு எதிரொலியாக 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. பழைய நடைமுறையே தொடரும் என அரசு தெரிவித்துள்ளது.
5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து பிளஸ்-1 வகுப்புக்கும் தேர்வு நடைமுறையை கடந்த 2017-18-ம் கல்வியாண்டு முதல் பள்ளிக்கல்வி துறை மாற்றி அமைத்தது. அதன்படி, 2017-18-ம் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் பிளஸ்-1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இதன் வரிசையில் மத்திய அரசு அடிப்படை கல்வியை மேம்படுத்துவதற்கு 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தலாம் என்றும், இது கட்டாயம் அல்ல. மாநில அரசின் விருப்பத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தலாம் என்றும் அரசாணை பிறப்பித்தது.
இந்த அரசாணையை மற்ற மாநில அரசுகள் ஏற்றதோ இல்லையோ?, தமிழக அரசு உடனே கையில் எடுத்தது. அதுகுறித்து கடந்த செப்டம்பர் மாதம் 13-ந் தேதி ஒரு அரசாணையை பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டு இருந்தார்.
எதிர்ப்பு
அதில், ‘தொடக்கக் கல்வி இயக்குனரின் பரிசீலனையை ஏற்று 2019-20-ம் கல்வியாண்டு முதல் மாநில பாடத்திட்டத்தினை பின்பற்றும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகளில் 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக அரசியல் கட்சிகளும், கல்வியாளர்களும் பெரும் எதிர்ப்பை பதிவு செய்தனர். 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது மாணவர்களின் இடைநிற்றலுக்கு வழிவகுக்கும். அதிலும் கிராமப்புற மாணவர்கள் இதில் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும் பல்வேறு தரப்பினர் கருத்துகளை முன்வைத்தனர்.
இதையடுத்து அரசு பொதுத்தேர்வு நடத்தப்பட்டாலும் முதல் 3 ஆண்டுகளுக்கு தேர்ச்சியை நிறுத்தி வைக்கமாட்டோம் என்று தெரிவித்தது. இருந்தாலும் அதற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து கொண்டே சென்றது. பல்வேறு மாணவர் அமைப்புகள் இதனை கண்டித்து போராட்டங்களையும் நடத்தினர்.
அச்சப்பட தேவையில்லை
ஆனாலும் தமிழக அரசு 5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற நிலைப்பாட்டில் சிறிதும் பின்வாங்காமல் தொடர்ந்து அதற்கான பணியை செய்தது. பொதுத்தேர்வுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன.
அதில் மாணவர்கள் வேறு பள்ளிகளுக்கு சென்று பொதுத்தேர்வு எழுத வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இது எதிர்ப்பை மேலும் அதிகரித்தது. பின்னர் அவற்றிலும் சில மாற்றங்களை கொண்டு வந்து, அந்தந்த பள்ளிகளிலேயே மாணவர்கள் தேர்வு எழுதலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கு பெறும் நிகழ்ச்சிகளில் நிருபர்கள் 5, 8-ம் வகுப்புகளுக் கான பொதுத்தேர்வு குறித்து கேள்வி எழுப்பும்போதெல்லாம், ‘பொதுத்தேர்வு நடத்தப்படும். மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தவே இந்த தேர்வு நடத்தப்படுகிறது. யாரும் அச்சப்பட தேவையில்லை’ என்ற பதிலையே பல நேரங்களில் கூறினார்.
ரத்து
கடும் எதிர்ப்புக்கு எதிரொலியாக, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக நேற்று திடீரென்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-2020-ம் ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக 13.9.2019 அன்று பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றன.
அவற்றை அரசு கவனமுடன் பரிசீலித்து, இந்த அரசாணையை ரத்து செய்ய முடிவு எடுத்து இருக்கிறது. எனவே, ஏற்கனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும் என்றும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வரவேற்பு
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்துக்கு பின்பு தான் இந்த அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. அரசின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர் வரவேற்றுள்ளனர்.

No comments:

Post a Comment

Please Comment