ஒரு கப் டீ பருகுங்கள்.. இதையும் படியுங்கள்.. இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களும் விரும்பி அருந்தும் பானம் என்ன தெரியுமா? டீதான்!
நமது நாட்டில் உள்ள 5 லட்சத்து 93 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களும், 4 ஆயிரத்து 378 நகரங்களும் அன்றாடம் டீ அருந்தி மகிழ்கின்றன. சென்னை போன்ற பெருநகரங்களில் ஒருநாளைக்கு ஒரு கோடி டீக்கு மேல் அருந்தப்படுகிறது. பெருநகரங்கள், நகரங்களில் மட்டுமல்ல, சாலை வசதி இல்லாத கிராமத்தில் கூட ஒரு குட்டி டீக்கடை முளைத்து அங்கே டீ தயாரிப்பு நடந்துகொண்டிருக்கும். பலர் அங்கே உட்கார்ந்து டீ பருகிக்கொண்டிருப்பார்கள்.
இந்தியாவின் 87 சதவீதக் குடும்பங்கள் டீ பருகு கிறார்கள் என்கிறது ஒரு சர்வே.
இதனால்தான் டீயை இந்தியாவின் தேசிய பானமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உரத்து ஒலிக்கச் செய்திருக்கின்றனர். சரி, டீயை தேசிய பானமாக அறிவிப்பதால் என்ன நடந்துவிடப் போகிறது?
‘பல நல்ல விஷயங்கள் நடக்கும்’ என் கிறார்கள், தேயிலை விளைவிப்போர்.
‘டீக்கு ஒரு நல்ல பிராண்ட் மதிப்பு கிடைக்கும், சர்க்கரை, பாலுடன் அல்லது அவையின்றி (சில இடங்களில் வெண்ணெய்யுடனும் கூட) இதை ஓர் ஆரோக்கிய பானமாகப் பிரபலப்படுத்த முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக, தேசிய பானம் என்பது ஒரு நாட்டின் அடையாளம், சுய மதிப்பு, வரலாறு, சூழலியல், கலாசாரம் ஆகியவற்றின் ஓர் அங்கம்’ என்கிறார்கள், தேயிலை உற்பத்தியாளர்கள்.
‘டீயை தேசிய பானம் ஆக்குங்கள்’ என்ற கோரிக்கையை முன்னெடுத்துச் செல்வதில் முன்னணியில் இருப்பது, வடகிழக்குத் தேயிலைச் சங்கம் (என்.இ.டி.ஏ). கிழக்கு அசாமில் தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த கோலாகாட் மாவட்டத்தில் இதன் தலைமையகம் அமைந்துள்ளது.
தேசிய பான அறிவிப்பு விஷயத்தில் பாகிஸ்தான் வேகமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அவர்கள் முன்பே கரும்புச் சாறை தேசியப் பானமாக அறிவித்துவிட்டார்கள். தேயிலை உற்பத்தியில் உலகின் ‘நம்பர் 1’ நாடாக இருக்கும் சீனாவையும் எடுத்துக்கொள்ளுங்களேன். அங்கு ‘கிரீன் டீ’தான் தேசிய பானம்.
இந்த நாடுகளை எல்லாம் விட்டுவிடுங்கள். இங்கிலாந்துக்கு தேயிலையை பெருமளவில் ஏற்றுமதி செய்பவர்கள் நாம்தான்.
ஆனால் இங்கிலாந்து தேசிய பானம், டீ! கடந்த 180 ஆண்டுகளாக பல்வேறு வகையான தேயிலையை உற்பத்தி செய்துவரும் நாம், டீக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்காமல் இருப்பது வினோதமே என்பது தேயிலை உற்பத்தியாளர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் 50 சதவீதத்தை எட்டிப்பிடித்திருக்கும் அசாமிலும் கூட டீக்கு இன்னும் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.
2005-ம் ஆண்டில், அசாம் மாநிலத்தின் விலங்காக காண்டாமிருகமும், மாநிலப் பறவையாக வெள்ளை இறக்கை மர வாத்தும் அறிவிக்கப்பட்டன.
ஆனால் டீயை கண்டுகொள்ளவில்லை. இதற்கு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பது அங்குள்ள மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அசாமின் மாநிலப் பானமாக அறிவிப்பது, தேசிய பானமாக்குவதற்கான முதல் படியாக அமையும் என்பது அவர்களது நோக்கம். உலகின் பெரும்பாலான பகுதிகளுக்கு ‘அசாம்’ என்ற பெயரை அறியச் செய்த டீயை அதிகாரப்பூர்வ பானமாக அறிவிக்காதது தேயிலை பிரியர்களுக்கே வேதனைதான்.
ஒரு கப் டீ பருகுவதற்குள் அத்தனையையும் படித்து முடித்துவிட்டீர்கள்தானே!
தேயிலை உற்பத்தியில் உலக அளவில் இந்தியாவுக்கு 2-வது இடம்.
உலகிலேயே அதிகமாக தேநீர் பருகும் நாடு இந்தியா. நாட்டின் தேயிலை உற்பத்தியில் 80 சதவீதத்தையும், உலக உற்பத்தியில் 20 சதவீதத்தையும் இந்தியர்கள் ருசிக்கிறார்கள்.
இந்தியாவில் ஏறக்குறைய பாதி அளவு தேயிலையை உற்பத்தி செய்வது அசாம். உலக அளவில் இம்மாநிலத்தின் பங்கு 13 சதவீதம்.
உலகளவில் தேயிலை ஏற்றுமதியில் நான்காவது பெரிய நாடு இந்தியா. உலக ஏற்று மதியில் நமது பங்கு 13 சதவீதம்.
பல்வேறு வகையான மணம், திடம், குணம் கொண்ட தேயிலைகளை இந்தியா உற்பத்தி செய்கிறது. அவற்றில் முக்கிய மானவை- டார்ஜீலிங், அசாம் பாரம்பரியம், அசாம் சிடிசி, டூரர்ஸ்-தேராய், நீலகிரி பாரம்பரியம், நீலகிரி சிடிசி, காங்ரா மற்றும் பச்சைத் தேயிலை.
பூமியில் தண்ணீருக்குப் பின் விலை மலிவான பானம், டீ.
நமது நாட்டில் தேயிலைத் தொழிலில் 10 லட்சத்து 20 ஆயிரம் நிரந்தரத் தொழிலாளர்கள் உள்ளனர். 20 லட்சம் பேர் மறைமுகமாக வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர்.


No comments:
Post a Comment
Please Comment