சத்துணவு திட்டத்தால் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு
சத்துணவு திட்டத்தால் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
சத்துணவுத் திட்டத்தால் பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் குறைந்ததோடு, மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
ஸ்ரீகிருஷ்ணர் கருத்து
சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு, காலை உணவை வழங்கிடும் திட்டத்துக்காக நடந்த பூமி பூஜை நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
தர்மம் செய்வதும், தானம் அளிப்பதும், மனித வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாக ஆக்கும். தானம் என்பது, பிறருக்குத் தேவையானவற்றை அவர்கள் கேட்டோ, அல்லது அடுத்தவர் அவர் நிலை பற்றிக் கூறி அறிந்தோ தருவதாகும்.
இவ்வாறு கொடை அளிப்பது ஒரு மன்னனின் கடமை மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனின் கடமையும் ஆகும் என்கிறார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். தானங்களிலேயே சிறந்த தானமாக, அன்னதானமே விளங்குகிறது.
ஒருவரது பசியைத் தீர்ப்பது அறம். அவ்வாறு அடுத்தவர் பசியை தீர்த்தால், அது அவருக்கு பிற்காலத்தில் சேமித்து வைப்பது போலானது, என்கிறார்
திருவள்ளுவர்.
“இட்டார் பெரியோர், இடாதோர் இழிகுலத்தோர்” என்று நமது முன்னோர்கள் அன்னதானம் செய்பவர்களின் மேன்மையை எடுத்துக் கூறினார்கள்.
எம்.ஜி.ஆரின் திட்டம்
இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் எம்.ஜி.ஆர்., பசியின் காரணமாக யாரும் பள்ளி செல்லாமல் இருத்திடக் கூடாது என்று 1982-ம் ஆண்டு சத்துணவுத் திட்டத்தை தொடங்கினார். அதை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மேலும் விரிவுபடுத்தினார்.
தற்போது தமிழ்நாட்டில் 43 ஆயிரத்து 283 பள்ளிகளில் தினந்தோறும் 49 லட்சத்து 85 ஆயிரத்து 335 மாணவ, மாணவிகளுக்கும், குழந்தைகளுக்கும் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக ரூ.1,477 கோடி அரசால் ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது.
இடைநிற்றல் குறைவு
சத்துணவுத் திட்டத்தின் காரணமாக பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை கணிசமாக அதிகரித்ததுடன், பள்ளிகளில் இருந்து மாணவர்களின் இடைநிற்றல் கணிசமாகக் குறைந்துள்ளது.
அட்சய பாத்திரம் அமைப்பின் மனிதநேயப் பணியின் தொடர்ச்சியாக, பூமி பூஜை போடப்பட்டு, நவீன வசதிகளுடன் அமையவிருக்கும் சமையல்கூடம் வாயிலாக சத்தான காலை உணவை மாணவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

No comments:
Post a Comment
Please Comment