அறிவியல் அறிவோம் : விமானங்களை மின்னல் தாக்குமா? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அறிவியல் அறிவோம் : விமானங்களை மின்னல் தாக்குமா?

அறிவியல் அறிவோம் : விமானங்களை மின்னல் தாக்குமா?

நீங்க வானத்தில் பறக்கும் விமானங்களை பாத்திருப்பீங்க இல்லையா..? அவை வானில் பறக்கும்போது மின்னல் தாக்கினால் பெரும்பாலும் பாதிப்படைவதில்லை. அது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா..? ஆகாய விமானங்கள் மேகங்களுக்கு மேலே பறந்து செல்கின்றன. வான் பரப்பின் முதல் அடுக்கான ‘டிரபோஸ்பியர்‘ பகுதியில்தான் பெரும்பாலான வானிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. 

இடி, மின்னல் மற்றும் மழைக்கு காரணமான மேகங்கள் இந்த அடுக்கில் உள்ளன. ஆனால் விமானங்கள் இதற்கு மேலே உள்ள அடுக்கான ‘ஸ்ட்ரட்டோஸ்பியர்' பகுதியில் பறக்கும்போது வானிலை மாற்றங்களால் விமானத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை. விமானங்கள் தரையிறங்கும்போது முதல் அடுக்கை கடந்துதான் வர வேண்டும். அப்போது இடி மின்னல் விமானத்தை தாக்கும் வாய்ப்பு உள்ளது. அப்படி மின்னல் தாக்கினால் விமானங்கள் எப்படி சமாளிக்கின்றன? என்பதை அறிவோமா... 

எப்போதுமே மின்னலின் போது வெட்டவெளியில் நிற்பதை விட காரில் இருப்பது பாதுகாப்பானது என்று பள்ளியில் படித்து இருக்கிறோம். ‘பாரடே' விளைவின்படி, மூடப்பட்ட உலோக சுற்றின் வழியே பாயும் மின்னோட்டம் அதன் உட்புறத்தில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. மின்னல் என்பது ஒரு மேக கூட்டத்தில் இருந்து இன்னொரு மேக கூட்டத்திற்கோ அல்லது தரைக்கோ மிக அதிக அளவில் குறுகிய காலத்தில் மின்சாரம் பாய்வது ஆகும். அந்த மின்சாரம் விமானத்தில் படும்போது விமானம் முழுவதும் மொத்தமாக மின் நிலைசக்தி பெறும். 

ஆனால், விமான பாகங்களுக்கு இடையே மின்சாரம் பாய்வதில்லை. விமானம் என்பது மூடப்பட்ட உலோகம் அல்லது அலோகம் மூலம் தயாரிக்கப்பட்டிருப்பதால் அதன் புறச்சுற்றின் வழியே மின்னோட்டம் செல்வதால் உள்ளே இருப்பவர்களுக்கு ஆபத்தும் ஏற்படுவதில்லை. அதாவது, விமானத்தை சுற்றி பாய்ந்த மின்னோட்டம், ‘எர்த்' என்ற நிலையில் தரையில் செல்ல இயலாத காரணத்தினால் காற்றில் கலந்துவிடும். அதனால், மின்னோட்டம் பாய்ந்து வெளியேறும் பகுதி மட்டும் சற்றே பாதிப்படையும் என்றாலும் பெரிய ஆபத்து இருக்காது. 

 ஆகாய விமானம் வேகமாக செல்லும்போது காற்றின் உராய்வினால் நிலை (ஸ்டேடிக்) மின்சாரம் உருவாகும். அதனால், விமானத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் மின் கடத்தியால் இணைத்திருப்பார்கள். அப்போதுதான், விமானம் முழுவதும் ஒரே மின் நிலை சக்தியில் செயல்படும். அதற்கேற்ப, விமானத்தில் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள ‘ஸ்டேட்டிக் டிஸ்சார்ஜ்' என்ற கூரான பொருட்கள் வழியாக மின்சார நிலை சக்தி வெளியேறிவிடும். 

அதிகமான மின்சாரத்தை வெளியேற்றும் போது அவை பாதிப்படைகின்றன. விமானப் பொறியாளர் அவற்றை கவனித்து தக்க சீரமைப்பு பணிகளை செய்வார். குறிப்பாக, விமானம் தரை இறங்கிய பின்னர் பல வழிகளில் நிலை மின்சாரம் தரைக்கு கடத்தப்படும். அதற்காக விமான டயர்களில் கார்பன் கலந்து இருப்பார்கள். 

மின்னல் காரணமாக 98 சதவீதம் விமானங்கள் பழுதடைய வாய்ப்பு இல்லை என்று பொறியாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அதனால நீங்கள் விமானத்தில் பறக்கும்போது மின்னல் தாக்கி விடுமோ என்று பயப்பட வேண்டியதில்லை.

No comments:

Post a Comment

Please Comment