அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்; அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வலியுறுத்தல்
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பொதுமக்கள் மேலும் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பேசிய அவர், அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்படும் வார்டுகளின் எண்ணிக்கை உயர்த்த உத்தரவிட்டுள்ளதாகவும், மருத்துவ பணிகளை மேற்கொள்ள ஓய்வுபெற்ற மருத்துவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர், விடுமுறையை கொண்டாட்டமாக கருதாமல் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
பொதுமக்கள் அலட்சியமாக இருக்காமல் அரசு சொல்லும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சீனாவின் வுகான் நகரில் கடந்தாண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த 3 மாதங்களில் உலகம் முழுவதும் 120 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை பலி வாங்கியுள்ளது.
2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை பாதித்துள்ளது. இந்நிலையில், உலகின் மிகப்பெரிய மக்கள் தொகையை கொண்ட இந்தியாவில் கடந்த மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. முதலில் ஒன்று, இரண்டு என்று தொடங்கிய இதன் பாதிப்பு, வேகமாக பரவி வருகிறது.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 258 ஆக உள்ளது. இறந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இனி வரும் நாட்களில் இந்நோய் மேலும் வேகமாக பரவும் அபாயம் இருப்பதால், மத்திய, மாநில அரசுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன்படி நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையில் நாடு முழுவதும் ‘மக்கள் ஊரடங்கு’ உத்தரவை பிரதமர் மோடி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment
Please Comment